கில் அரைசதம்: லக்னெள அணிக்கு 145 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 10th May 2022 09:23 PM | Last Updated : 10th May 2022 09:31 PM | அ+அ அ- |

பந்தை பறக்கவிடும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மான் கில்
லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன
மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விர்த்திமான் சாஹா சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். எனினும் சுப்மான் கில் நிதானமாக ஆடி ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.
லக்னெள அணியில் ஆவேஷ் கானின் அபார பந்துவீச்சால் மாத்திவ் வாடே (10), ஹார்திக் பாண்டியா (11), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் 24 பந்துகளில் 26 ரன்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் தெவாடியா 16 பந்துகளில் 22 ரன்களை சேர்த்தார். எனினும் மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் அரை சதம் கடந்து 63 ரன்களைக் குவித்தார்.
முடிவில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி 144 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னெள அணி களமிறங்கவுள்ளது.
புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும் நோக்கில் குஜராத் அணியும், முதல் இடத்தை தக்க வைக்க லக்னெள அணியும் மோதுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.