அஸ்வின் அரைசதம்: ராஜஸ்தான் 160 ரன்கள் குவிப்பு

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.
அஸ்வின் அரைசதம்: ராஜஸ்தான் 160 ரன்கள் குவிப்பு



டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தானுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் நிதான தொடக்கத்தைத் தந்தனர். 11 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த பட்லர் சேத்தன் சகாரியா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, 3-வது வரிசை வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அஸ்வின் துரிதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் ரேட்டை சற்று உயர்த்தினார். பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது.

ஜெய்ஸ்வால் பெரிய இன்னிங்ஸை ஆடாமல் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அஸ்வினுடன் இணைந்து தேவ்தத் படிக்கலும் சற்று துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தது. அஸ்வினும் 37-வது பந்தில் அரைசதத்தை அடித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இது அவரது முதல் அரைசதம்.

ஆனால், அரைசதம் அடித்த கையோடு அடுத்த பந்திலேயே சரியாக 50 ரன்களுக்கு அஸ்வின் ஆட்டமிழந்தார். 

அஸ்வின் விக்கெட்டுக்கு பிறகு வரிசையாக பேட்டர்களை இழக்கத் தொடங்கியது ராஜஸ்தான். சஞ்சு சாம்சன் (6), ரியான் பராக் (9), தேவ்தத் படிக்கல் (30 பந்துகளில் 48 ரன்கள்) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இதனால், கடைசி நேரத்தில் அதிரடிக்கு வீரர்கள் இல்லாமல் ராஜஸ்தான் திணறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரசி வாண்டர் டுசன் 12 ரன்களும், டிரென்ட் போல்ட் 3 ரன்களும் எடுத்தனர்.

டெல்லி அணித் தரப்பில் சேத்தன் சகாரியா, மிட்செல் மார்ஷ், அன்ரிச் நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com