டி காக் 140* ரன்கள்: விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்த லக்னௌ

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்துள்ளது.
டி காக் 140* ரன்கள்: விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்த லக்னௌ


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே அதிரடி காட்டி விளையாடியது. பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, சற்று ரன் ரேட்டில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில், டிம் சௌதி வீசிய 10-வது ஓவரில் ராகுல் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். இதன்பிறகு, சீரான வேகத்தில் ரன் உயர்ந்தது. டி காக் 36-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ராகுலும் 41-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைத் தாண்டிய இந்த இணை 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 122 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, டி காக் ருத்ரதாண்டவ நிலைக்குச் சென்று விளையாட லக்னௌ ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. வருண் சக்ரவர்த்தி வீசிய 16-வது ஓவரில் டி காக் 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாச லக்னௌவுக்கு 18 ரன்கள் கிடைத்தன. இதன்பிறகு, ஆண்ட்ரே ரஸல் வீசிய 18-வது ஓவரில் டி காக் மீண்டும் சிக்ஸரும், பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தன. அதே ஓவரில் டி காக்கும் 59-வது பந்தில் சதத்தை எட்டினார்.

இதன்பிறகு, டிம் சௌதி 19-வது ஓவரை வீசினார். முதல் பந்தை ராகுல் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அடுத்து ஸ்டிரைக்குக்கு வந்த டி காக் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து விளாசினார். இதனால், அந்த ஓவரில் லக்னௌவுக்கு 27 ரன்கள் கிடைத்தன.

கடைசி ஓவரை ரஸல் மீண்டும் வீசினார். அதிரடி மனநிலையில் இருந்த டி காக் கடைசி ஓவரிலும் தொடர்ந்து 4 பவுண்டரி விளாசினார். இதனால், அந்த ஓவரிலும் லக்னௌவுக்கு 19 ரன்கள் கிடைத்தன.

இறுதிவரை விக்கெட்டை பறிகொடுக்காமல் டி காக், ராகுல் இணை புதிய சாதனையைப் படைத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னௌ அணி விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்துள்ளது. டி காக் 70 பந்துகளில் 140 ரன்களும், ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களும் எடுத்தனர்.

டி காக் பவுண்டரி மற்றும் சிக்ஸரிலேயே 100 ரன்கள் எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com