பட்லர் மிரட்டல் அடி: குஜராத்துக்கு 189 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 24th May 2022 09:28 PM | Last Updated : 24th May 2022 09:47 PM | அ+அ அ- |

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், யஷ் தயல் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, பட்லர் நிதானம் காட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி அதிரடி காட்டத் தொடங்கினார். சாம்சன் அதிரடியால் ராஜஸ்தான் ரன் ரேட் ஓவருக்கு 9-ஐ தாண்டியது.
பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சிறப்பான இன்னிங்ஸை விளையாடி வந்த சாம்சன் 47 ரன்கள் எடுத்திருந்தபோது சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் அதிரடிக்கு நேரம் எடுத்துக்கொள்ள, பட்லரும் அதிரடி காட்டத் தொடங்காததால் ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது.
சாய் கிஷோர் வீசிய 14-வது ஓவரில் படிக்கல் 1 சிக்ஸர், 2 பவுண்டரி விளாச ரன் ரேட் சற்று உயர்ந்தது. அடுத்த ஓவரிலேயே அவர் ஹார்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழக்கும்போது பட்லர் 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.
படிக்கல் விக்கெட்டுக்கு பிறகு பட்லர் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். 15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது.
யஷ் தயல் வீசிய 17-வது ஓவரில் பட்லர் 4 பவுண்டரி விளாச 18 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். அந்த ஓவரில் பட்லர் அரைசதத்தையும் எட்டினார்.
அல்சாரி ஜோசஃப் வீசிய 18-வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார் பட்லர்.
அடுத்து முகமது ஷமி வீசிய 19-வது ஓவரிலும் 1 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார் பட்லர்.
தயல் வீசிய 20-வது ஓவரில் 1 சிக்ஸர் பறக்கவிட்ட பட்லர் கடைசி பந்தில் 2-வது ரன் எடுக்க முயன்று ஆட்டமிழந்தார். அவர் 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.
ஆனால், கடைசி பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால், கடைசி பந்தை எதிர்கொள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். அதுவும் வைடாக வீசப்பட்டது. அந்த பந்தில் ரியான் பராக் ரன் அவுட் ஆனார். இதனால், டிரென்ட் போல்ட் களமிறங்கினார். கடைசி பந்தில் அஸ்வின் 2 ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.
குஜராத் தரப்பில் முகமது ஷமி, யஷ் தயல், சாய் கிஷோர், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.