படிதார் சதம், கார்த்திக் அதிரடி: பெங்களூரு 207 ரன்கள் குவிப்பு

படம்: ட்விட்டர் | ஐபிஎல்
படம்: ட்விட்டர் | ஐபிஎல்


லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் விராட் கோலி மற்றும் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். மோசின் கான் வீசிய முதல் ஓவரிலேயே டு பிளெஸ்ஸி தனது முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கோலியுடன் ரஜத் படிதார் இணைந்தார். இந்த இணை சற்று நிதானம் காட்டியது.

பவர் பிளேவின் கடைசி ஓவரை கிருனால் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் படிதார் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை பறக்கவிட பெங்களூருவுக்கு 20 ரன்கள் கிடைத்தன. பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.

கோலி பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 25 ரன்களுக்கு ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.

படிதார் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, மஹிபால் லோம்ரோரும் வந்த வேகத்தில் அதிரடி காட்ட முயற்சித்து பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அது நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ரவி பிஷ்னாய் சுழலில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட்டுக்கு பிறகு ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில், பிஷ்னாய் மீண்டும் 16-வது ஓவரை வீசினார்.

அந்த ஓவரில் படிதார் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளை தெறிக்கவிட, பெங்களூருவுக்கு 27 ரன்கள் கிடைத்தன. இந்த ஓவரில் ஒரு பவுண்டரி தீபக் ஹூடா கேட்ச் தவறவிட்டதன் விளைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவேஷ் கான் வீசிய அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரிகளை விளாசினார். இதனால், ரன் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த சீசன் முழுவதும் சிறப்பாகப் பந்துவீசி வரும் மோசின் கான், இந்த ஓவரையும் சிறப்பாக வீசினார். படிதாரால் பந்தை எதிர்கொள்ளவே முடியவில்லை. ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பை மனன் வோரா தவறவிட்டதால் 2 ரன்கள் கிடைத்தன. பிறகு, ஒரேயொரு பந்தை மட்டும் படிதார் சிக்ஸருக்கு அனுப்பினார். இந்த சிக்ஸர் மூலம் 49-வது பந்தில் சதத்தை எட்டினார் படிதார்.

துஷ்மந்தா சமீரா வீசிய 19-வது ஓவரில் கார்த்திக் மற்றும் படிதார் ஆகியோர் தலா 1 பவுண்டரி, 1 சிக்ஸர் பறக்கவிட பெங்களூருவுக்கு 21 ரன்கள் கிடைத்தன.

ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் கார்த்திக் பவுண்டரி விளாசினார். இதன்பிறகு, வைடாக வீசப்பட்ட பந்தில் பவுண்டரி கிடைத்தது. மற்ற பந்துகளை அவர் சிறப்பாக வீசியதால், அந்த ஓவரில் மொத்தம் 13 ரன்கள் எடுத்தது பெங்களூரு.  

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 84 ரன்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த படிதார் 54 பந்துகளில் 112 ரன்களும், கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர்.

லக்னௌ தரப்பில் மோசின் கான், கிருனால் பாண்டியா, ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com