ஐபிஎல் போட்டிக்காகத் திருமணத்தை ஒத்தி வைத்த ரஜத் படிதார்

49 பந்துகளில் சதமடித்த படிதார், 54 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் போட்டிக்காகத் திருமணத்தை ஒத்தி வைத்த ரஜத் படிதார்

மே 9 அன்று ரஜத் படிதாருக்கு திருமணம் செய்துவைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆர்சிபி அணியில் இருந்து வந்த அழைப்பு அவருடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது. 

மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த 28 வயது ரஜத் படிதார், 2015 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். கடந்த வருடம் ரூ. 20 லட்சத்துக்கு ஆர்சிபி அணி தேர்வு செய்தது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் படிதாரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. எனினும் போட்டி தொடங்கிய பிறகு ஆர்சிபி வீரர் சிஸ்சோடியாவுக்குக் காயம் ஏற்பட்டதால் கடந்த ஏப்ரல் 3 அன்று படிதாரை ரூ. 20 லட்சத்துக்கு மீண்டும் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் புதிய சாதனை படைத்து புகழ்பெற்றுவிட்டார் படிதார். 

லக்னெளவுக்கு எதிரான பிளேஆஃப் ஆட்டத்தில் படிதார் அடித்த சதத்தால் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 49 பந்துகளில் சதமடித்த படிதார், 54 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் இடம்பெறாத உள்ளூர் வீரர்களில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

இந்நிலையில் மே 9 அன்று ரஜத் படிதாருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் பிறகு அவர் ஆர்சிபி அணிக்குத் தேர்வானதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் படிதாரின் தந்தை தகவல் தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு படிதாரின் தந்தை மனோகர் படிதார் அளித்த பேட்டியில் கூறியதாவது: ரத்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரஜத் படிதாருக்காகத் தேர்வு செய்திருந்தோம். மே 9 அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. சிறிய விழாவாகத் திட்டமிடப்பட்டு இந்தூரில் ஒரு விடுதியைப் பதிவு செய்திருந்தோம் என்றார்.

முதலில் ஐபிஎல் ஏலத்தில் தேர்வாக வாய்ப்பிருந்ததால் தீபாவளிக்கு முன்பு திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தார்கள். ஆனால் ஏலத்தில் படிதாரை யாரும் தேர்வு செய்யாததால் மே 9 அன்று திருமணம் என முடிவானது. இதன்பிறகு ஆர்சிபி, படிதாரைத் தேர்வு செய்துவிட, எல்லாத் திருமண ஏற்பாடுகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிக்குப் பிறகு மத்தியப் பிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பைப் போட்டியின் காலிறுதியில் பஞ்சாப் அணிக்கு எதிராக படிதார் விளையாடவுள்ளார். இதன்பிறகு தான் அவருடைய திருமணம் நடைபெறும் என அறியப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com