மேகனா, ரோட்ரிக்ஸ் அதிரடி அரைசதம்: டிரையல் பிளேசர்ஸ் 190 ரன்கள் குவிப்பு
By DIN | Published On : 26th May 2022 10:18 PM | Last Updated : 26th May 2022 10:18 PM | அ+அ அ- |

வெலாசிட்டி அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டிரையல் பிளேசர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் வெலாசிட்டி, டிரையல் பிளேசர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வெலாசிட்டி கேப்டன் தீப்தி சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
டிரையல் பிளேசர்ஸ் தொடக்க வீராங்கனைகளாக ஷபினேனி மேகனா மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். மந்தனா 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க | ஆசியக் கோப்பை ஹாக்கி: 16-0 கோல் கணக்கில் இந்தோனேஷியாவைப் பந்தாடியது இந்தியா
இதன்பிறகு, மேகனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ரன் ரேட் சீரான வேகத்தில் உயர்ந்தது. அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வந்த மேகனா 47 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 73 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய ஹேலே மேத்யூஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், அரைசதம் அடித்து கலக்கி வந்த மற்றொரு வீராங்கனையான ரோட்ரிக்ஸையும் இழந்தது டிரையஸ் பிளேசர்ஸ். அவர் 44 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் விளாசினார்.
கடைசி நேரத்தில் டன்க்லே அதிரடி காட்டி 8 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். மேத்யூஸ் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டிரையல் பிளேசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.
191 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி அணி சற்று முன்பு வரை 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.