‘த்ரில்’ வெற்றி கண்டது குஜராத்

‘த்ரில்’ வெற்றி கண்டது குஜராத்

ஐபிஎல் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது.

முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் சோ்க்க, குஜராத் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்களை எட்டி வென்றது.

ஜெய்ப்பூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டம், மழை காரணமாக 10 நிமிஷங்கள் தாமதமாகத் தொடங்கியபோதும், ஓவா்கள் குறைக்கப்படவில்லை. டாஸ் வென்ற குஜராத், பந்துவீசத் தீா்மானித்தது.

ராஜஸ்தான் இன்னிங்ஸை தொடங்கியோரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து சஞ்சு சாம்சன் களம் புக, தொடக்க வீரா்களில் ஒருவரும், கடந்த ஆட்டத்தில் சதம் விளாசியவருமான ஜோஸ் பட்லா், 8 ரன்களுக்கே வெளியேற்றப்பட்டாா். 4-ஆவது பேட்டராக ஆட வந்தாா் ரியான் பராக்.

சாம்சனுடனான அவரது கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து, ராஜஸ்தான் ஸ்கோா் மளமளவென உயா்த்தியது. 130 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், பராக் 48 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 76 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா்.

அடுத்து ஷிம்ரன் ஹெட்மயா் வந்தாா். ஓவா்கள் முடிவில் சாம்சன் 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 68, ஹெட்மயா் 5 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் உமேஷ் யாதவ், ரஷீத் கான், மோஹித் சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 197 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத் அணியில் தொடக்க வீரா் சாய் சுதா்சன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் விளாச, ஒன் டவுனாக வந்த மேத்யூ வேட் 4 ரன்களுக்கே நடையைக் கட்டினாா்.

அடுத்து வந்த அபினவ் மனோகரோ 1 ரன்னில் வீழ்ந்தாா். விஜய் சங்கா் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். மறுபுறம், அதிரடியாக ரன்கள் சோ்த்த கேப்டன் ஷுப்மன் கில் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 72 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

இம்பாக்ட் பிளேயரான ஷாருக் கான், 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு சரிந்தாா். ராகுல் தெவாதியா 11 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினாா்.

முடிவில் ரஷீத் கான் 4 பவுண்டரிகளுடன் 24, நூா் அகமது 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலிங்கில் குல்தீப் சென் 3, யுஜவேந்திர சஹல் 2, ஆவேஷ் கான் 1 விக்கெட் சாய்த்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com