ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு அடிமேல் அடி! 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி போராடி தோற்றது.
ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு அடிமேல் அடி! 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
படம் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எக்ஸ் தளப் பதிவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீசியது.

இதையடுத்து, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் சால்ட், 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 36 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் குவித்தார்.

பின் வரிசையில் களமிறங்கிய ரஸல் நிதானம் காட்டினாலும், மறுபுறம் ராமந்தீப் சிங் பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் திரட்டியது.

இதையடுத்து, 223 ரன்கள் வெற்றி இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.

தொடக்கவீரராக களம் கண்ட விராட் கோலி அதிரடியில் இறங்கினார். அவர் 7 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 12 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்திருந்த போது, ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து பாப் டூ ப்ளஸிஸ் 7 ரன்களுக்கு நடையைக் கட்ட பெங்களூரு அணி பவர்-பிளே ஓவர்களில் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், அடுத்து வந்த வில் ஜாக்ஸ் அவர் 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்கபலமாக ரஜத் படிதார் அவர் 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 3 பவுண்டரியுடன் 52 ரன்கள் குவித்தார்.

இவர்கள் இருவரின் அதிரடியால் பெங்களூரு அணி 11.1 ஓவரில் 137 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய வீரர்களும் ரன் ரேட்டை சரிய விடாமல் சீராக ரன் எடுத்து வந்ததால் இறுதி ஓவரில் பெங்களூரு அணி வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்டது.

இறுதி ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச, கர்ண் ஷர்மா முதல் பந்தில் சிக்ஸர் அடித்து பெங்களூரு ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றினார். 2வது பந்தில் ரன் எடுக்கப்படவிலை.

இந்த நிலையில், 3வது பந்தையும், 4வது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு பெங்களூரு ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டார் கர்ண் ஷர்மா.

கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஆனால் அடுத்த பந்திலேயே கர்ண் ஷர்மா ஸ்டார்க் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் பெர்குசன் 1 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆக, 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com