பவர்பிளே பகுதியில் அசத்தும் சன்ரைசர்ஸ்! சொதப்பினாலும் சமாளிக்கும் சிஎஸ்கே!

பவர்பிளே பகுதியில் மிக மோசமாக விளையாடினாலும், கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்தும் பந்துவீச்சில் அசத்தியும்...
பவர்பிளே பகுதியில் அசத்தும் சன்ரைசர்ஸ்! சொதப்பினாலும் சமாளிக்கும் சிஎஸ்கே!

டி20 ஆட்டத்தில் முதல் ஓவர் முதல் 6-வது ஓவர் வரையிலான பவர்பிளே பகுதி என்பது அதிமுக்கியமானது. 

பவுண்டரி எல்லைக்கோட்டுக்கு அருகே இரு ஃபீல்டர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதால் அந்த ஓவர்களில் அதிக ரன்களைக் குவிக்க எந்தவொரு பேட்ஸ்மேனாக இருந்தாலும் விருப்பபடுவார்.

இந்த வசதியை இந்த வருடம் அருமையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்களான டேவிட் வார்னரும் பேர்ஸ்டோவும்.

இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் அணி, பவர்பிளே-யில் ஒரு விக்கெட்டையும் இழக்கவில்லை. மேலும் 3 ஆட்டங்களிலும் வார்னர் - பேர்ஸ்டோவ் கூட்டணி 100 ரன்களைக் கடந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி நடைபெற்றதில்லை என்பதால் எல்லா அணிகளும் இந்த ஜோடியைப் பார்த்து வாயைப் பிளக்கின்றன. 

சன் ரைசர்ஸ் - ஐபிஎல் 2019 - முதல் விக்கெட் கூட்டணி

vs கொல்கத்தா - 118 ரன்கள்
vs ராஜஸ்தான் - 110 ரன்கள்
vs பெங்களூர் - 185 ரன்கள்

சன் ரைசர்ஸ் - ஐபிஎல் 2019 - பவர்பிளே ரன்கள்

vs கொல்கத்தா - 54/0
vs ராஜஸ்தான் - 69/0
vs பெங்களூர் - 59/0

பலமான தொடக்கக் கூட்டணியால் இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் வென்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி. அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளார்கள் வார்னரும் பேர்ஸ்டோவும். 

சென்னை அணி இதற்கு நேர்மாறாக பவர்பிளேயில் சுமாராக விளையாடி வருகிறது. இந்த வருடம் பவர்பிளே பகுதியில் குறைந்த ரன்ரேட் உள்ள அணி பெங்களூரோ, ராஜஸ்தானோ அல்ல, சிஎஸ்கே! இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கேவின் பவர்பிளே ரன் ரேட் - 5.72 தான். 

சென்னை சூப்பர் கிங்ஸ்  - ஐபிஎல் 2019 - பவர்பிளே ரன்கள்

vs பெங்களூர் - 16/1
vs தில்லி - 58/1
vs ராஜஸ்தான் - 29/3

பவர்பிளே பகுதியில் மிக மோசமாக விளையாடினாலும், கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்தும் பந்துவீச்சில் அசத்தியும் இந்தக் குறையை நிவர்த்தி செய்துவிடுகிறது சிஎஸ்கே. 

சன்ரைசர்ஸ், சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் முற்றிலும் வேறுவிதங்களில் பவர்பிளே பகுதிகளைக் கையாண்டு வருகின்றன. எனினும் பவர்பிளேயில் குறைந்த ரன்கள் எடுத்து தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது சிஎஸ்கே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com