ஒரு தோல்வியிலேயே வெட்டவெளிச்சமான குறைகள்: அலட்சியமான திட்டமிடலால் முதல் தோல்வியைச் சந்தித்த சிஎஸ்கே!

சஹார் 3 ஓவர்கள் வீசி 21 ரன்களும் ஜடேஜா 2 ஓவர்கள் வீசி 10 ரன்களும் கொடுத்த நிலையில் இவர்களிருவருக்கும்...
ஒரு தோல்வியிலேயே வெட்டவெளிச்சமான குறைகள்: அலட்சியமான திட்டமிடலால் முதல் தோல்வியைச் சந்தித்த சிஎஸ்கே!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 15-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பையில், புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களே எடுத்தது.

இந்தத் தோல்வியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சிஎஸ்கே, தற்போது இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளது. சென்னையும் பஞ்சாப்பும் 4 ஆட்டங்களில் 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 

சிஎஸ்கே அணியின் இந்தத் தோல்விக்கு தோனியின் மோசமான திட்டமிடலே காரணம் என்றால் அது சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். 

முதல் மூன்று ஆட்டங்களிலும் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த சென்னை அணியை மும்பை அணி தோற்கடித்ததற்கு தோனி சரியான வியூகம் அமைக்காததே காரணம். 

*

கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். வாட்சன், ராயுடு, தோனி ஆகியோர் நன்கு விளையாடி சிஎஸ்கே அணி அதிக ரன்கள் குவிக்க உதவினார்கள்.

ஆனால் இந்தமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. பந்துவீச்சில் தீபக் சஹாரும் இம்ரான் தாஹிரும் அசத்தி வரும் வேளையில் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை அதுபோல பாராட்டமுடியவில்லை. சிஎஸ்கே அணி 3-வது ஆட்டம் ஆடி முடித்த பிறகு, அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் டாப் 10-ல் ஒரு சிஎஸ்கே வீரரும் இல்லை. 13-வது இடத்தில் தோனியும் 17-வது இடத்தில் ரெய்னாவும் இருந்தார்கள். இதனால் சென்னை அணியின் பேட்டிங்கைப் பலப்படுத்தவேண்டிய கட்டாயம் உருவானது. ஆனால் அணியில் உள்ள இந்த ஓட்டையைக் கவனிக்க அல்லது அடைக்க மறந்துவிட்டார் தோனி. 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் சாண்ட்னருக்குப் பதிலாக மோஹித் சர்மாவைத் தேர்வு செய்தார் தோனி. அதாவது, டு பிளெஸ்ஸிஸும் சாம் பில்லிங்ஸும் இதுவரை ஒரு வாய்ப்பும் பெறாத நிலையில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரைத் தேர்வு செய்தார். கடைசியில் இது மிகப்பெரிய தவறாக அமைந்துவிட்டது. 

சிஎஸ்கே அணியில் டு பிளெஸ்ஸிஸ் இடம்பெற்றிருந்தால் அவரால் அணியின் பேட்டிங் கூடுதல் பலம் பெற்றிருக்கும். ஏற்கெனவே அவுட் ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களின் குறையை அதன் மூலம் நிவர்த்தி செய்திருக்கலாம். இலங்கைக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பிரமாதமாக ஆடி நல்ல ஃபார்மில் உள்ளார் டு பிளெஸ்ஸிஸ். (சாண்ட்னருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருந்தாலும் அது பேட்டிங்குக்கும் உதவியாக இருந்திருக்கும். )

தோனி நம்பிய பேட்டிங் வரிசை நேற்று மிகவும் ஏமாற்றியது. நேற்றும் என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும். 4 ஆட்டங்களில் தோனி, ஜாதவ், ரெய்னா ஆகியோர் மட்டுமே 100 ரன்களைக் கடந்துள்ளார்கள். வாட்சன் 62 ரன்களும் பிராவோ 39 ரன்களும் ராயுடு 34 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளார்கள். தோனியும் ஜாதவ்வும் மட்டுமே தலா ஒரு அரை சதம் எடுத்துள்ளார்கள். ஒரு டி20 ஆட்டத்தில் பலமான பேட்டிங் அமையாவிட்டால் அது எந்த அணிக்கும் சிரமத்தை அளிக்கும். அதுதான் மும்பைக்கு எதிராக சிஎஸ்கேவுக்கு நேர்ந்தது.

ஆனால் தோனி தேர்வு செய்த மோஹித் சர்மா மிக மோசமாகப் பந்துவீசி 3 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். அதிலும் இவர் வீசிய 17-வது ஓவரில் 16 ரன்கள் எடுத்தது மும்பை. அந்த ஓவரிலிருந்து தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பாண்டியா. மோஹித் சர்மா வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார். அதேபோல நன்றாக வீசிவந்த பந்துவீச்சாளர்களையும் தோனி சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நேற்றைய ஆட்டத்தில் சஹாரும் ஜடேஜாவும் தலா நான்கு ஓவர்கள் வீசியிருந்தாலே மோஹித் சர்மாவின் அந்தக் கடைசி ஓவர் தேவைப்பட்டிருக்காது. சஹார் 3 ஓவர்கள் வீசி 21 ரன்களும் ஜடேஜா 2 ஓவர்கள் வீசி 10 ரன்களும் கொடுத்த நிலையில் இவர்களிருவருக்கும் கூடுதல் ஓவர்கள் தரவில்லை தோனி.  

மேலும் மும்பை அணி ஆஸ்திரேலிய இடக்கைப் பந்துவீச்சாளர் ஜேசன் ஃபெஹ்ரன்டார்ஃபை ரூ. 1 கோடிக்கு மட்டுமே தேர்வு செய்துள்ள நிலையில் சிஎஸ்கே அணி, மோஹித் சர்மாவை ரூ. 5 கோடி கொடுத்து ஏலத்தில் தேர்வு செய்துள்ளது. நேற்றைய ஆட்டத்திலேயே இருவருடைய திறமைகளிலுள்ள வித்தியாசத்தை உணரமுடிந்தது. வேகப்பந்துவீச்சாளருக்கு ரூ. 5 கோடி கொடுத்துள்ள நிலையில் இவரை விடவும் திறமையான பந்துவீச்சாளரை சிஎஸ்கே தேர்வு செய்திருக்கலாம். உள்ளூர் போட்டிகளில் சமீபமாகச் சுமாராகவே பந்துவீசியுள்ளார். இந்த அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது மோஹித் சர்மா மீது சிஎஸ்கே வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையையே இது காட்டுகிறது. இனி வரும் ஆட்டங்களில் அதற்குரிய பங்களிப்பை மோஹித் சர்மா வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாமா?

சென்னை அணிக்குக் கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவின் என்ஜிடி போன்ற அற்புதமான பந்துவீச்சாளர் அமைந்ததால் கோப்பையை வெல்ல முடிந்தது. ஆனால், இந்தமுறை அப்படியொரு பாக்கியம் இதுவரை இல்லை. சுமாரான பந்துவீச்சு, பேட்டிங்கைக் கொண்டு சமாளிக்க வேண்டிய நிலைமை தோனிக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு தோல்வியிலேயே இந்தக் குறைகள் வெட்டவெளிச்சமாகிவிட்டன. கடந்த மூன்று ஆட்டங்களையும் எப்படியோ சமாளித்து வெற்றி பெற்ற சென்னை அணி, மும்பை மண்ணில் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டது. நல்ல பந்துவீச்சு, ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன்கள் ஆகிய பலங்கள் இல்லாததால் முதல் தோல்வியைச் சந்தித்துவிட்டது. 

ஆனால் அடுத்த இரு ஆட்டங்களுக்குப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. வரும் சனிக்கிழமை பஞ்சாப்புக்கு எதிராகவும் அடுத்த செவ்வாயன்று கொல்கத்தாவுக்கு எதிராகவும் என சென்னையில் இரு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சிஎஸ்கே அணிக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. இங்கு தோல்வியடையவதே தற்போதெல்லாம் அரிதாகிவிட்டது. சென்னை அணியின் பலவீனங்களை சேப்பாக்கம் ஆடுகளம் அழகாக மறைத்துவிடுகிறது. 

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி 15 ஆட்டங்களில் (ஏப்ரல் 22, 2013 முதல்) சிஎஸ்கே அணி 14 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 2015-ல், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில். மற்றபடி சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே தொட்டதெல்லாம் பொன்னாகிவிடுகிறது. இதனால் மும்பைக்கு எதிராகத் தோற்றாலும் அடுத்த இரு ஆட்டங்களும் நம் வசம் தான் என சிஎஸ்கே ரசிகர்கள் தெம்பாக இருக்கலாம்.

சென்னையில் நடைபெறவுள்ள ஆட்டங்கள் என்பதால் மோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறல்லாம். பதிலாக, ஹர்பஜன் சிங்கோ அல்லது கரண் சர்மாவோ அணியில் இடம்பெறலாம். ராயுடுவுக்குப் பதிலாக அபாரமான ஃபார்மில் இருக்கும் முரளி விஜய், துருவ் ஷோரே ஆகிய இருவரில் ஒருவர் தேர்வாகலாம். எனினும் இந்த முடிவை சிஎஸ்கே அணி எடுத்தால் அது அம்பட்டி ராயுடுவுக்குப் பெரிய பின்னடைவாக அமையும். இந்திய உலகக் கோப்பை அணியில் ராயுடு இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதாக உள்ள நிலையில் சிஎஸ்கே அணியிலும் அவருக்கு இடம் கிடைக்காவிட்டால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். தன்னுடைய பேட்டிங் திறமையையும் ஃபார்மையும் வெளிப்படுத்த முடியாமல் போகும். ராயுடுவுக்கு மட்டுமல்ல, தோனிக்கும் இதனால் சிக்கலான நிலைமை. 

பிராவோவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக நியூஸிலாந்து வீரர் ஸ்காட் குக்ஜெலெஜின் அணியில் இடம்பெறலாம். நியூஸிலாந்து அணிக்காக 2 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடி ஆல்ரவுண்டராக அறியப்பட்டவர் (பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றுக்காகவும்). இதனால் குக்ஜெலெஜினின் தேர்வு சிஎஸ்கே பந்துவீச்சில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவருமா என இனிமேல் தான் தெரியவரும். எனினும் இதுபோன்ற ஒரு பலவீனமான பந்துவீச்சைக் கொண்டு பிளேஆஃப் சுற்றுகளில் சிஎஸ்கே எப்படிச் சமாளிக்கும் என்கிற கவலை சராசரி ரசிகனுக்கு ஏற்படலாம். அதிலும் ஓர் ஆறுதலான பதில் - பிளேஆஃப் ஆட்டம் ஒன்றும் இறுதிச்சுற்று ஆட்டமும் சென்னை சேப்பாக்கத்தில், சிஎஸ்கே கோட்டையில்தான் நடைபெறவுள்ளது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com