12 மணி நேர இடைவெளியில் ஐபிஎல் - இலங்கை உள்ளூர் போட்டியில் விளையாடியுள்ள லசித் மலிங்கா!

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கலந்துகொண்ட மலிங்கா, நேற்றிரவு ஆட்டம் முடிந்தவுடன் விமானம் மூலமாக...
12 மணி நேர இடைவெளியில் ஐபிஎல் - இலங்கை உள்ளூர் போட்டியில் விளையாடியுள்ள லசித் மலிங்கா!

நேற்றிரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மும்பையில் விளையாடிய லசித் மலிங்கா தற்போது இலங்கை கண்டியில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார். 12 மணி நேர இடைவெளியில் இரு நாடுகளில் நடைபெற்ற ஆட்டங்களில் அவர் பங்கேற்றுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 15-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பையில், புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களே எடுத்தது. 4 ஓவர்கள் வீசிய மலிங்கா 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகவுள்ள அனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களும் உள்ளூர் ஒருநாள் போட்டி ஒன்றில் கலந்துகொள்ளவேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்வதில் லசித் மலிங்காவுக்குச் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக, இப்பிரச்னையில் பிசிசிஐ தலையிட்டது. ஐபிஎல் போட்டியில் முழுவதுமாகக் கலந்துகொள்வதாக இருந்ததால்தான் மலிங்காவின் பெயர் ஏலத்தில் தேர்வானது. அதில் அவரை ஓர் அணி தேர்வு செய்துள்ள நிலையில் திடீரென போட்டியில் கலந்துகொள்ள முடியாது என்கிற நிலை உருவானால் இது ஐபிஎல் போட்டிக்கும் குறிப்பிட்ட அணிக்கும் சிக்கல் ஏற்படும் என்று பிசிசிஐ சார்பில் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள மலிங்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உள்ளூர் போட்டியை விடவும் ஐபிஎல் போட்டியில் இன்னும் கடினமான எதிரணிகளுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

எனினும் சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கலந்துகொண்ட மலிங்கா, நேற்றிரவு ஆட்டம் முடிந்தவுடன் விமானம் மூலமாக இலங்கைக்குக் கிளம்பினார். இரவு 12 மணியளவில் ஆட்டம் முடிந்த நிலையில் அவசர அவசரமாக இலங்கைக்குக் கிளம்பியுள்ளார். மும்பையிலிருந்து கொழும்புக்கு இரண்டரை மணி நேரம் விமானப் பயணம் செய்த மலிங்கா, அதன்பிறகு ஒரு மணி நேரம் பயணம் செய்து கண்டியைச் சென்றடைந்துள்ளார். 

கண்டி சென்று இவர் தலைமையேற்றுள்ள கேலே அணி சார்பாக இலங்கை உள்ளூர் ஒருநாள் போட்டியில் கலந்துகொண்டார். முதலில் விளையாடிய கேலே அணி 50 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்தது. மலிங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு எதிரணியான கண்டி பேட்டிங் செய்தபோது அசத்தலாகப் பந்துவீசியுள்ளார் மலிங்கா. அந்த அணியின் முதல் ஐந்து விக்கெட்டுகளையும் மலிங்காவே எடுத்தார். 

ஏப்ரல் 11 உடன் இந்தப் போட்டி முடிவடைகிறது. இதன்பிறகு ஐபிஎல் போட்டிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com