ஹைதராபாத்தில் ஐபிஎல் இறுதிச்சுற்று?: மீண்டும் ஏமாற்றமடையப் போகும் சென்னை ரசிகர்கள்!

இந்தப் பிரச்னைக்குத் தீர்வே இல்லையா, காலம் முழுக்க சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்துகொண்டே தான் இருக்கவேண்டுமா?
ஹைதராபாத்தில் ஐபிஎல் இறுதிச்சுற்று?: மீண்டும் ஏமாற்றமடையப் போகும் சென்னை ரசிகர்கள்!

பிசிசிஐ தெளிவாகச் சொல்லிவிட்டது. சென்னை சேப்பாக்கத்தில் நிலவும் மூன்று பார்வையாளர் மாடங்களின் பிரச்னையை முடித்துவிட்டு வாருங்கள். இல்லாவிட்டால், பிளேஆஃப் ஆட்டம், ஐபிஎல் இறுதிச்சுற்று ஆட்டங்கள் சென்னையில் நடைபெறாது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திறக்கப்படாமல் உள்ள 3 பார்வையாளர் மாடங்கள் விவகாரத்தில் தேவையான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து அனுமதி பெற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு 1 வாரம் கெடு விதித்துள்ளது பிசிசிஐயின் சிஓஏ. சிஓஏ தலைவர் வினோத் ராய் தலைமையில் உறுப்பினர்கள் டயானா எடுல்ஜி, ரவி தோக்டே மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் சிகே.கண்ணா, அமிதாப் செளத்ரி, அனிருத் செளத்ரி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஐபிஎல் போட்டி மற்றும் பல்வேறு கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஐபிஎல் இறுதி ஆட்டம் மே 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற வேண்டுமானால், சென்னை சேப்பாக்கத்தில் நிலவும் மூன்று பார்வையாளர் மாடங்களின் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஐபிஎல் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் நடத்தப்படும் என வினோத் ராய் கூறியுள்ளார். 

சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே ஆகிய மாடங்களில் அமர பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கான ஒப்புகைச் சான்றிதழை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பெற்றிருக்கவில்லை. ஆகவே, அந்த 3 பார்வையாளர் மாடங்களில் ரசிகர்கள் அமர கடந்த ஏழு ஆண்டுகளாக அனுமதி இல்லை. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் விதிகளின்படி, மைதானத்தில் உள்ள அந்த பார்வையாளர் மாடங்களுக்கு இடையிலான இடைவெளி 8 மீட்டராக இருக்க வேண்டும். ஆனால், ஐ,ஜே,கே ஆகிய மூன்று மாடங்களுக்கு இடையிலான இடைவெளி 5.4 மீட்டர்களாக மட்டுமே உள்ளது. அதனால், அந்த மாடங்களுக்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கவில்லை. இந்தப் பிரச்னையால் அந்த மூன்று மாடங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 12,000 இருக்கைகள் வீணாகின்றன.

2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை சேப்பாக்கத்தில் ஓர் ஐபிஎல் ஆட்டமும் நடைபெறவில்லை. 2018-ல் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே என கடந்த சில வருடங்களாக ஐபிஎல் அணிகளில் உள்ளூரில் குறைந்த ஆட்டங்களை விளையாடிய அணியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். மேலும் கிரிக்கெட் மீது அதீத காதல் கொண்டுள்ள சென்னை ரசிகர்களுக்கும் இது பேரிழப்புதான். சென்னையில் குறைந்த ஐபிஎல் ஆட்டங்கள், சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று மாடங்களைப் பயன்படுத்த முடியாத நிலை என அவர்களை ஏமாற்றும் பல விஷயங்கள் நடந்துள்ளன. 

கடந்த வருடம் ஐபிஎல் போட்டியை வென்றதால் சென்னையில் ஒரு பிளேஆஃப் ஆட்டமும் இறுதிச்சுற்றும் நடக்கவேண்டும். ஆனால் இந்த பார்வையாளர் மாடங்கள் பிரச்னை சரிசெய்யப்படாமல் இருப்பதால் அந்த வாய்ப்பைப் பறிகொடுக்கும் நிலையில் உள்ளது சென்னை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். 

சென்னையின் வாய்ப்பு வேறு நகரத்துக்குச் செல்வது துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கான உரிமையை இழக்கிறார்கள். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களும் பிளேஆஃப் ஆட்டங்களை நடத்தத் தயாராக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் வினோத் ராய்.

முடிவெடுக்க இன்னும் சில வாரங்கள் உள்ளன. நாங்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து பிரச்னையைத் தீர்க்க வேறு வழியுண்டா எனப் பார்ப்போம். சேப்பாக்கம் போன்ற பெரிய மைதானத்தில் மூன்று பார்வையாளர் மாடங்கள் காலியாக இருப்பது தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. இந்தப் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் சென்னையின் ஆட்டங்கள் பெங்களூருக்கு மாற்றப்படும் என்று டயானா எடுல்ஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

இந்தப் பிரச்னைக்குத் தீர்வே இல்லையா, காலம் முழுக்க சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்துகொண்டே தான் இருக்கவேண்டுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com