பஞ்சாப்பால் மறக்க முடியாத அந்த 10 சிக்ஸர்கள்: கேப்டன் போலார்டு மிரட்டலில் மும்பை 'த்ரில்' வெற்றி
By DIN | Published On : 11th April 2019 12:31 AM | Last Updated : 11th April 2019 12:31 AM | அ+அ அ- |

நன்றி: iplt20.com
போலார்டின் மிரட்டல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பஞ்சாபை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங் விவரம்: http://bit.ly/2uViVC9
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் மற்றும் சித்தேஷ் லேட் ராஜ்புத் பந்துவீச்சை விளாசினர். ஆனால், முகமது ஷமி சிறப்பாக பந்துவீசினார். இதன்மூலம், அவர் தனது முதல் 2 ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து சித்தேஷ் லேட்டை போல்டாக்கினார்.
அதன்பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ரன் குவிக்க டி காக் துரிதமாக ரன் சேர்க்க திணறினார். சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் சேர்த்து சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்தார். இடதுகை பேட்ஸ்மேன், வலதுகை பேட்ஸ்மேன் என்ற கூட்டணிக்காக இஷான் கிஷனுக்கு பதிலாக கீரன் போலார்டு களமிறங்கினார். சிக்ஸர்கள் அடிக்க திணறிய டி காக் 24 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து, இடதுகை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் களமிறங்கினார். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள் காரணமாக மும்பை அணி முதல் 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், போலார்டு சிக்ஸர்களாக அடிக்க தொடங்கினார். இதனிடையே கிஷன் 7 ரன்னுக்கு ரன் அவுட் ஆனார்.
இதையடுத்து, போலார்டுடன் ஹார்திக் பாண்டியா இணைந்து அதிரடியாக ரன் குவிக்க தொடங்கினார். ஆனால், பாண்டியாவுக்கு வழக்கமான டைமிங் கிடைக்கவில்லை. எனினும், மறுமுனையில் போலார்டு இமாலய சிக்ஸர்களாக அடித்து பஞ்சாப் பந்துவீச்சாளர்களை மிரட்டி வந்தார்.
இந்த நிலையில் ஹார்திக் பாண்டியா 19 ரன்களுக்கு முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அவரது சகோதரர் க்ருணால் பாண்டியாவும் ஆட்டமிழந்தார். இதனால், மொத்த நெருக்கடியும் கேப்டன் போலார்டிடமே சென்றது. அவர் எந்தவித நெருக்கடிக்கும் ஆளாகாமல் சிக்ஸர்கள் மட்டும் அடித்து மும்பை அணிக்கு நம்பிக்கை அளித்து வந்தார். இதன்மூலம், அவர் 22 பந்தில் அரைசதம் அடித்தார்.
இருந்தாலும், அல்சாரி ஜோசப் போலார்டுக்கு ஒத்துழைத்து இடையில் 2 பவுண்டரிகளும் அடித்து ஆறுதல் அளித்தார். இதையடுத்து, கடைசி 2 ஓவரில் 32 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
19-ஆவது ஓவரை சாம் கரன் வீசினார். அதில் போலார்டு 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அசால்ட்டாக அடித்து களத்தில் இருந்தார். இதனால், கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைபட்டது. ஸ்டிரைக்கில் போலார்டு தான் இருந்தார். கடைசி ஓவரை ராஜ்புத் (இந்த போட்டியில் முதல் 3 ஓவரில் 37 ரன்கள் வழங்கினார்) வீசினார்.
முதல் பந்தை நோ பாலாக வீச போலார்டு அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஃபீர் ஹிட்டான அடுத்த பந்தையும் அவர் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால், 5 பந்துகளுக்கு 4 ரன் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அடுத்த பந்தை ராஜ்புத் பவுன்சராக வீச, போலார்டு தூக்கி அடித்தார். ஆனால், பவுண்டரிக்கு அருகே மில்லர் அதை கேட்ச் பிடித்தார். இதனால், ஆட்டத்தில் மீண்டும் டிவிஸ்ட் ஏற்பட்டது. போலார்டு 31 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பிறகு, 3-ஆவது பந்தில் ஜோசப் ரன் எடுக்கவில்லை. இதனால் 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை. அதற்கு அடுத்த இரண்டு பந்துகளில் தலா 1 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால், கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதில் ஜோசப் பந்தை மிட் ஆன் திசைக்கு அடித்து 2 ரன்கள் ஓடி எடுத்து மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த இன்னிங்ஸில் போலார்டின் ஸ்டிரைக் ரேட் 267.74 ஆகும். மும்பை அணியில் போலார்டுக்கு அடுத்தபடியான அதிகபட்ச ஸ்கோர் 24 ஆகும்.
எனவே, இந்த மிரட்டல் ஆட்டத்தால் போலார்டு ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.