தொடர்ச்சியாக அதிக ஆட்டங்களில் விளையாடிய சாதனையைத் தவறவிட்ட ரோஹித் சர்மா!

நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்காததால் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை ரோஹித் சர்மாவால் தாண்டமுடியாமல் போனது...
தொடர்ச்சியாக அதிக ஆட்டங்களில் விளையாடிய சாதனையைத் தவறவிட்ட ரோஹித் சர்மா!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 24-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. 

மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் அடித்து "த்ரில்' வெற்றி கண்டது. அந்த அணி வீரர் பொலார்டு 31 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான ரோஹித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.  மும்பையில் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரது வலது கால் தசையில் பிடிப்பு ஏற்பட்டதாகவும், அதிலிருந்து அவர் மீண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ள மும்பை அணி, முன்னெச்சரிக்கையாக பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித்துக்கு ஓய்வளித்ததாகக் கூறியுள்ளது. 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்காததால், ஐபிஎல்-லில் தொடர்ச்சியாக ஓர் அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய சாதனையைத் தவறவிட்டார் ரோஹித் சர்மா. 2008-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா விளையாடவில்லை.  2011-ல் மும்பை அணிக்கு மாறியபிறகு ஓர் ஆட்டத்திலும் ரோஹித் சர்மா விளையாடாமல் இருந்ததில்லை. ஐபிஎல்-லில் மும்பை அணிக்காக தொடர்ச்சியாக 133 ஆட்டங்கள் விளையாடிய பிறகு நேற்று ஓய்வெடுத்துள்ளார் ரோஹித் சர்மா. நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்காததால் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை ரோஹித் சர்மாவால் தாண்டமுடியாமல் போனது. ரெய்னா சிஎஸ்கே அணிக்காக தொடர்ச்சியாக 134 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தொடர்ச்சியாக ஓர் அணிக்காக அதிக ஆட்டங்கள் விளையாடிய வீரர்கள்

சுரேஷ் ரெய்னா (சென்னை) - 134 ஆட்டங்கள் (2008 - 18)
ரோஹித் சர்மா (மும்பை) - 133 ஆட்டங்கள் (2011- 19)
விராட் கோலி (பெங்களூர்) - 129 ஆட்டங்கள் (2008 - 16)
தோனி (சென்னை) - 119* ஆட்டங்கள் (2010 - 19)
கம்பீர் (கொல்கத்தா) - 108 ஆட்டங்கள் (2011 - 17)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com