அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்: சிஎஸ்கே வீரர்கள் எங்கப்பா?

சிஎஸ்கே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் இப்படி விளையாடியும் சென்னை அணியால் அதிக வெற்றிகளை அடைந்ததற்குக் காரணம்...
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்: சிஎஸ்கே வீரர்கள் எங்கப்பா?

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றிபெற்று, ஜம்மென்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள கேகேஆர் அணியை விடவும் நான்கு புள்ளிகள் அதிகமாக எடுத்துள்ளது சென்னை அணி.

வழக்கமாக, இதுபோல அதிக வெற்றிகளைப் பெறும் அணி, பேட்ஸ்மேன்களின் பலத்தால் அதைச் சாதித்தது போலத் தோன்றும். ஆனால், சிஎஸ்கே அணியோ முற்றிலும் எதிரான நிலையில் உள்ளது.

ஐபிஎல் 2019 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 25 வீரர்களில் தோனி மட்டுமே இடம்பெற்றுள்ளார். முதல் மூன்று இடங்களில் வார்னர் 349 ரன்களுடனும் ராகுல் 317 ரன்களுடனும் ஆண்ட்ரே ரஸ்ஸல் 302 ரன்களுடனும் உள்ளார்கள். தோனி 214 ரன்களுடன் 9-ம் இடத்தில் உள்ளார். அவ்வளவுதான்.

அந்தப் பட்டியலில் பிறகு சிஎஸ்கே வீரர்களைத் தேடவேண்டியதாக உள்ளது. 25 வீரர்கள் வரை அவர்கள் தென்படுவதேயில்லை. 136 ரன்களுடன் ரெய்னா 26-வது இடத்திலும் 133 ரன்களுடன் ராயுடு 27-வது இடத்திலும் உள்ளார்கள். ஜாதவ் 115 ரன்களும் வாட்சன் 105 ரன்களும் இதுவரை எடுத்துள்ளார்கள்.

முதல் மூன்று பேட்ஸ்மேன்களாக விளையாடிய வாட்சன், ராயுடு, ரெய்னா ஆகிய மூவரும் ஃபார்மிலேயே இல்லை. இதனால் ராயுடு பின்னுக்குத் தள்ளப்பட்டு, டு பிளெஸிஸ் தொடக்க வீரராகக் களமிறங்கி வருகிறார். ஆடிய 3 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் எடுத்துள்ளார்.

இப்படி வாட்சன், ராயுடு, ரெய்னா, ஜாதவ் ஆகிய வீரர்கள் ஃபார்மில் இல்லாதபோதும் அணியைக் கரையேற்றுபவர் தோனி மட்டுமே. கடைசிக்கட்டங்களில் அதிரடியாக விளையாடி சென்னையை ஒவ்வொருமுறையும் ஆபத்திலிருந்து காப்பாற்றி வருகிறார். இதுவரை இரு அரை சதங்கள் எடுத்துள்ளார் தோனி. 

ராயுடு, ஜாதவ், டு பிளெஸிஸ் ஆகியோர் தலா ஒரு சதமாவது எடுத்துள்ளார்கள். ஆனால், சிஎஸ்கே ரசிகர்களை இதுவரை மிகவும் ஏமாற்றியவர்கள் என்றால் வாட்சனும் ரெய்னாவும்தான். அதிகபட்சமாக, வாட்சன் 44 ரன்களும் ரெய்னா 36 ரன்களும் எடுத்துள்ளார்கள். (இதனால் கொல்கத்தாவுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் வாட்சன் நீக்கப்பட்டு முரளி விஜய் சிஎஸ்கே அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.) 

ஐபிஎல் 2019 - சிஎஸ்கே முன்னணி வீரர்கள் எடுத்துள்ள ரன்கள்

தோனி - 214 ரன்கள்
சுரேஷ் ரெய்னா - 136 ரன்கள்
அம்பட்டி ராயுடு - 133 ரன்கள்
கெதர் ஜாதவ் - 115 ரன்கள்
ஷேன் வாட்சன் - 105 ரன்கள்
டு பிளெஸிஸ் - 104 ரன்கள்

மற்ற அணிகளின் வீரர்கள் எப்படி விளையாடி வருகிறார்கள் என்று பார்த்தால் தான் இதை இன்னும் புரிந்துகொள்ள முடியும். 

ஐபிஎல் 2019 - ஒவ்வொரு அணியிலும் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 வீரர்கள்

சிஎஸ்கே

தோனி - 214 ரன்கள்
சுரேஷ் ரெய்னா - 136 ரன்கள்
அம்பட்டி ராயுடு - 133 ரன்கள்

ஹைதராபாத்

349 வார்னர் 
263 பேர்ஸ்டோவ்
131 விஜய் சங்கர்

பஞ்சாப்

317 ராகுல் 
223 கெய்ல் 
184 மயங்க் அகர்வால்

கொல்கத்தா

302 ரஸ்ஸல்
211 உத்தப்பா
183 ராணா

தில்லி

249 தவன்
222 ரிஷப் பந்த் 
221 ஸ்ரேயஸ் ஐயர் 

பெங்களூர்

203 கோலி
173 டி வில்லியர்ஸ்
172 பார்தீவ் படேல் 

ராஜஸ்தான்

199 பட்லர் 
174 ஸ்மித்
146 சாம்சன் 

மும்பை

179 பொலார்ட்
157 டி காக் 
138 சூர்யகுமார்

*

சிஎஸ்கே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் இப்படி விளையாடியும் சென்னை அணியால் அதிக வெற்றிகளை அடைந்ததற்குக் காரணம், பந்துவீச்சாளர்களின் பங்களிப்புதான். 

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டிலில் டாப் 10-ல் மூன்று சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். தீபக் சஹார், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங். இன்னும் சொல்லப்போனால் இந்தப் பட்டியலில் முதல் 13 வீரர்களில் 5 சிஎஸ்கே வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். பிறகு ஏன் சிஎஸ்கேவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்காது! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com