என்ன நடக்குது இங்க?: தலா 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்ற கொல்கத்தா & ஹைதராபாத்! விஸ்வரூபம் எடுக்கும் தில்லி!

இந்த வருடமும் பிளேஆஃப்-புக்கு நுழையவுள்ளது சென்னை அணி. இந்த நிமிடத்தில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு குறையும் இல்லை... 
என்ன நடக்குது இங்க?: தலா 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்ற கொல்கத்தா & ஹைதராபாத்! விஸ்வரூபம் எடுக்கும் தில்லி!

இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்றுடன் பாதி அணிகள் தலா 8 ஆட்டங்களிலும் மீதி அணிகள் தலா 7 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளன.  

கடந்த இரு நாள்களில் ஐபிஎல் போட்டியில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் இடைவெளியில் முதலிடத்தில் உள்ளது. தில்லி அணி தடாலடியாக 10 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்றதால் கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

சென்னை அணி கடந்த நான்கு ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. நேற்று, கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. டாஸ் வென்ற சென்னை பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வென்றது சென்னை. இந்த வருடமும் பிளேஆஃப்-புக்கு நுழையவுள்ளது சென்னை அணி. இந்த நிமிடத்தில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு குறையும் இல்லை. 

அதேபோல நடுவில் இரு ஆட்டங்களில் தோற்ற தில்லி அணி, தற்போது தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்று அசத்தியுள்ளது. பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் என மூன்று அணிகளுக்கு எதிராக அபாரமாக விளையாடியுள்ளது அந்த அணி. நேற்றைய ஆட்டத்தில், ஹைதராபாத்தை 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி கேபிடல்ஸ். முதலில் ஆடிய தில்லி 155/7 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆறே பேட்ஸ்மேன்களைக் கையில் வைத்துக்கொண்டு (7-ம் நிலை வீரர், அக்‌ஷர் படேல்!) பந்துவீச்சின் பலத்தில் எதிரணிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்து வருகிறது தில்லி அணி. 

கொல்கத்தா அணியின் நிலைமை திடீரென பரிதாபன நிலைமைக்குச் சென்றுவிட்டது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று அனைவரும் அச்சப்படும் அணியாக இருந்தது கொல்கத்தா அணி. ஆனால், ரஸ்ஸல் அருமையான ஃபார்மில் இருந்தபோதும் கடைசி 3 ஆட்டங்களில், சென்னைக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் தில்லி எதிராகவும் தோற்றுள்ளது தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணி. இதனால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கொல்கத்தா அணி தற்போது 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது. தினேஷ் கார்த்தின் தலைமைப் பண்பு சரியாக இல்லாததும் அந்த அணியின் சரிவுக்கு ஒரு காரணம். 

சன்ரைசர்ஸ் நிலைமை இன்னும் பரிதாபம். கொல்கத்தாவுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் தோற்றபோதும் வார்னர் - பேர்ஸ்டோவின் அதிரடியால் அடுத்த மூன்று ஆட்டங்களில் வென்றது. ஆனால், நடுவரிசை வீரர்களின் மோசமான ஆட்டத்தால் கடந்த மூன்று ஆட்டங்களிலும் அந்த அணி தோற்றுள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது. 

அனைத்து அணிகளும் பாதி ஆட்டங்களில் விளையாடிவிட்டதால் ஐபிஎல் போட்டியின் அடுத்தப் பகுதி மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளிகள் பட்டியல்

 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 சென்னை  8 7 1 14 +0.288
 தில்லி 8 5 3 10 +0.418
 கொல்கத்தா  8 4 4 8 +0.350
 மும்பை 7 4 3 8 +0.209
 பஞ்சாப் 8 4 4 8 -0.093
 ஹைதராபாத்  7 3 4 6 +0.409
 ராஜஸ்தான் 7 2 5 4 -0.587
 பெங்களூர் 7 1 6 2 -1.202

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com