தோனி இல்லாத சென்னை திணறல் பேட்டிங்: ஹைதராபாத்துக்கு 133 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது.
நன்றி: iplt20.com
நன்றி: iplt20.com


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதுகு பிடிப்பு காரணமாக சென்னை அணியில் தோனி களமிறங்கவில்லை. அதனால், ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் டு பிளெசிஸ் நல்ல அடித்தளத்தை அமைத்தனர். ஆடுகளத்துக்கு ஏற்ப இருவரும் விக்கெட்டை பாதுகாத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டு பிளெசிஸ் துரிதமாக ரன் குவிக்க, வாட்சன் நிதானமாக விளையாடினார். இதனால், சென்னை அணியின் ரன் ரேட் 7.5-இல் நீடித்து வந்தது. 

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில் வாட்சன் முதல் விக்கெட்டாக 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டு பிளெசிஸ்ஸும் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். 

தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததையடுத்து நடுவரிசை பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரெய்னா 13, ஜாதவ் 1,  பில்லிங்ஸ் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், சென்னை அணியின் ரன் ரேட் அதிகரிக்கவே இல்லை. 

ஜடேஜாவும் கடைசி கட்டத்தில் துரிதமாக ரன் குவிக்க திணறினார். ராயுடு மட்டும் ஓரளவு அதிரடியாக விளையாடினார்.  

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 20 பந்துகளில் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஹைதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, ஷபாஸ் நதீம் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

சென்னை அணி முதல் 10 ஓவரில் 80 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவரில் 52 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com