பெங்களூரு மைதானத்தை கலங்கடித்த தோனி: சென்டிமீட்டர் இடைவெளியில் தோல்வியை தழுவியது சென்னை!

பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்டிமீட்டர் இடைவெளியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. 
நன்றி: iplt20.com
நன்றி: iplt20.com


பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்டிமீட்டர் இடைவெளியில் 1 ரன் வித்தியாசத்தில் செaன்னை அணி தோல்வியடைந்தது. 

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங் விவரம்: http://bit.ly/2VVixPD

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டேல் ஸ்டெயின் மற்றும் உமேஷ் யாதவ் சென்னை அணியை மிரட்டும் வகையில் பந்துவீசினர். வாட்சன் மற்றும் ரெய்னாவை ஸ்டெயின் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார். டு பிளெசிஸ் மற்றும் ஜாதவை உமேஷ் யாதவ் அடுத்தடுத்து ஓவர்களில் வீழத்தினார். இதனால், சென்னை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது. 

அதன்பிறகு, தோனி மற்றும் ராயுடு சற்று தாக்குப்பிடித்து விளையாடினர். தோனி அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க ராயுடு நிதானமாக விளையாடினார். அதன்பிறகு, ராயுடுவும் ஒரு கட்டத்தில் அதிரடியாக ரன் குவித்த தொடங்கினார். 

ஆனால், அதிரடியாக விளையாட தொடங்கிய சமயத்திலே அவர் சாஹல் பந்தில் போல்டானார். அவர் 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜாவும் தொடக்கத்தில் சற்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சென்னை அணியின் வெற்றிக்கு தேவையான ரன் ரேட் அதிகரித்துக்கொண்டே இருந்தது. 

கடைசி 5 ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 70 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலை உருவானது. அதாவது, ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 

சாஹல் வீசிய 16-ஆவது ஓவரின் கடைசி பந்தில் தோனி ஒரு சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. ஆனால், அடுத்த ஓவரிலேயே ஜடேஜா ரன் அவுட் ஆனார். இதனால், சென்னை அணி மேலும் நெருக்கடிக்குள்ளானது. அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடைசி 3 ஓவரில் 49 ரன்கள் தேவைப்பட்டது. 

18-ஆவது ஓவரை ஸ்டெயின் ஓரளவு நன்றாக வீசியதால் அந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி தான் கிடைத்தது. அதேசமயம், தோனி அந்த சிக்ஸரை அடித்ததன் மூலம் 35-ஆவது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

இதையடுத்து, கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 

19-ஆவது ஓவரை நவ்தீப் சைனி அற்புதமாக வீச, முதல் இரண்டு பந்துகளில் தோனி ரன் எடுக்கவில்லை. இதனால் போட்டி பெங்களூரு பக்கம் போனது. அதன்பிறகு, 3-ஆவது பந்தை சைனி நோ பாலாக வீச தோனி அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதையடுத்து, போட்டியில் மீண்டும் விறுவிறுப்பு அதிகரித்தது. ஆனால், அந்த ஓவரில் மேற்கொண்டு பவுண்டரிகள் போகவில்லை. கடைசி பந்திலும் பிராவோ ஆட்டமிழக்க சென்னை அணிக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவானது. 

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. ஏகதேசம் பெங்களூரு அணி வெற்றி பெற்றுவிட்டது என்ற எண்ணமே தோன்றியது. 

ஆனால், தோனி கடைசி ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார். கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். 

முதல் பந்தை உமேஷ் யாதவ் பவுன்சராக வீச தோனி அதை பவுண்டரிக்கு விரட்டினார். இரண்டாவது பந்தை தோனி 111 மீட்டருக்கு மைதானத்தைவிட்டு வெளியே இமாலய சிக்ஸர் அடிக்க மைதானமே அதிர்ந்தது. 3-ஆவது பந்தையும் தோனி சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஏபி டி வில்லியர்ஸால் தனது முழு உழைப்பை கொடுத்தும் அதை தடுக்க முடியவில்லை. இதனால், கடைசி 3 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 

அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் எடுக்க கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 5-ஆவது பந்தையும் தோனி மீண்டும் சிக்ஸருக்கு அனுப்ப கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆனால், கடைசி பந்தை தோனியால் அடிக்க முடியவில்லை. பந்து கீப்பர் பார்தீவ் படேலிடம் சென்றது. அவர், ஷர்துல் தாகூர் கிரீஸை தொடுவதற்கு சென்டிமீட்டர் இடைவெளியில் நேரடி த்ரோ மூலம் ஸ்டம்புகளை தகர்த்தார். இதன்மூலம், சென்னை அணி கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

கடைசி 6 பந்தில் 26 ரன்கள் என்பது சாத்தியமற்ற ஒன்று. ஆனால், அதை தோனி ஏறக்குறைய சாத்தியப்படுத்தி பெங்களூரு மைதானத்தை மிரட்டினார். சென்னை அணி 1 ரன்னில் தோல்வியடைந்திருந்தாலும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தை அளித்தது. 

இந்த போட்டி ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக அமையும். 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 48 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com