4 ரன்னில் சதத்தை தவறவிட்ட வாட்சன்: ஹைதராபாத்தை வீழ்த்தி பதிலடி தந்தது சென்னை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் வாட்சன் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
நன்றி: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ்
நன்றி: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் வாட்சன் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்கிழமை) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில்  3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் விவரம்: http://bit.ly/2IQC5kz

176 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். டு பிளேசிஸ் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்த சீசனில் சொல்லிக்கொள்ளும்படி விளையாடாத வாட்சன் தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டினார். அதன்பிறகு, கலீல் அகமது ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து மிரட்ட தொடங்கினார். 

மறுபுறம் ரெய்னா சந்தீப் சர்மா ஓவரில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து மிரட்டினார். இதனால், சென்னை பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இருவரும் அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து விளையாடினர். இந்த நிலையில் ரஷித் கானின் கூக்லி பந்தில் ரெய்னா 38 ரன்களுக்கு ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். 

ரெய்னா ஆட்டமிழந்த பிறகு வாட்சன் டாப் கியருக்கு மாறி பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடிக்க தொடங்கினார். இதன்மூலம், அவர் தனது 35-ஆவது பந்தில் அரைசதமும் அடித்தார். இவர் ரஷித் கான் ஓவரிலேயே சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்தார். 

இவர் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்து வந்ததால் வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டும் ஓவருக்கு 7 ரன்கள் தான் என்ற நிலைக்கு எளிதானது. இதன்மூலம், அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். 

வாட்சன் 53 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 96 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, ராயுடுவும் ஜாதவும் பவுண்டரிகள் அடிக்காமல் விளையாட கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஆனால், ஜாதவ் கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க சற்று விறுவிறுப்பு தணிந்தது. 

இதையடுத்து, சென்னை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு சென்றது. இதன்மூலம், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை சென்னை அணி ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com