அணி வீரர்கள் கேப்டன் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்: 6 தோல்விகளுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் பேட்டி

முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக இல்லாதபோது கேள்விகள் கேட்கப்படும். அதை நான் புரிந்துகொள்கிறேன்...
அணி வீரர்கள் கேப்டன் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்: 6 தோல்விகளுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்த வருட ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் நிலைமை திடீரென பரிதாபன நிலைமைக்குச் சென்றுவிட்டது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று அனைவரும் அச்சப்படும் அணியாக இருந்தது கொல்கத்தா அணி. ஆனால், கடைசி 6 ஆட்டங்களில் அந்த அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், பெங்களூர் அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் முறையே 7-ம் மற்றும் 8-ம் இடங்களில் உள்ளன. இதனால் இந்த மூன்று அணிகளுக்கும் கடைசி 3 ஆட்டங்களும் முக்கியமாக உள்ளன. அந்த மூன்றில் ஒன்றில் தோற்றாலும் போட்டியிலிருந்து வெளியேறவேண்டியதுதான்.

நேற்றைய ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் ஆடிய கொல்கத்தா 175/6 ரன்களை எடுத்த நிலையில், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 177/7 ரன்களைக் குவித்து வென்றது.

தினேஷ் கார்த்தின் தலைமைப் பண்பு மிகவும் விமரிசிக்கப்படுகிறது. பேட்டிங்கிலும் சொதப்பினார். முதல் 10 ஆட்டங்களில் ஒரு அரை சதம் உள்பட 117 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 119.38. ஆனால் நேற்று புதிய தினேஷ் கார்த்திக்கைப் பார்க்க முடிந்தது. 50 பந்துகளில் 9 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் அடித்தும் அவரால் அணியின் தோல்வியைத் தடுக்க முடியாமல் போனது. 

தோல்விக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் பேட்டியளித்ததாவது:

முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக இல்லாதபோது கேள்விகள் கேட்கப்படும். அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஓர் அணியாக பல விஷயங்களைச் சரியாகச் செய்ய முயல்கிறோம். நாங்கள் எந்தத் தவறையும் கவனிக்காமல் இல்லை. சரியான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம். சரியாக அணித்தேர்வை உருவாக்க முயல்கிறோம். ஒவ்வொரு ஆட்டத்தையும் நாங்கள் வெல்வோம் என்கிற அணுகுமுறையுடன் களமிறங்குகிறோம். எல்லோரையும் சுதந்தரமாக இருக்க அனுமதிக்கிறோம். ஓய்வறை நல்ல மனநிலையில் இருப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறோம். அணி வீரர்கள் அவர்களுடைய கேப்டன் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். முன்னே நின்று அணியை வழிநடத்த வேண்டியது என் கடமை. ஆனால் சில நேரங்களில் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமையாது. உண்மை என்னவென்றால் நாங்கள் கடினமாக முயற்சி செய்கிறோம். என் அணியினர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் தீவிரமாகக் கவனம் செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com