தோனி விளையாடவில்லையென்றால் சிஎஸ்கே அவ்வளவு தானா?: பயிற்சியாளர் ஃபிளெமிங் பதில்!

தோனி இல்லாமல் சென்னை அணி தடுமாறுவது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியதாவது...
தோனி விளையாடவில்லையென்றால் சிஎஸ்கே அவ்வளவு தானா?: பயிற்சியாளர் ஃபிளெமிங் பதில்!

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காய்ச்சலால் தோனிக்கு ஓய்வு: இதற்கிடையே சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு தரப்பட்டது. கடந்த 2010-க்கு பின் இரண்டாவது முறையாக சென்னை அணி சார்பில் ஆடாமல் உள்ளார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். அதே போல் டூபிளெஸிஸ், ஜடேஜா ஆகியோரும் ஆடவில்லை. முரளி விஜய், ஷோரே அணியில் சேர்க்கப்பட்டார்கள். முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களைக் குவித்தது. ஆனால் மோசமான பேட்டிங்கினால், 15 பந்துகள் மீதமிருக்க, 17.4 ஓவர்களிலேயே 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சென்னை. இந்த வருட ஐபிஎல் போட்டியில், சொந்த மைதானத்தில் தோல்வியே பெறாமல் இருந்த சென்னை தற்போது மும்பையிடம் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ளதால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவது தற்போது எளிதாகிவிட்டது. சென்னை அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. எனினும் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிக்கமுடியும். 

தோனி இல்லாமல் சென்னை அணி தடுமாறுவது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியதாவது:

தோனி இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் பேட்ஸ்மேன்கள் உள்ளதாக நான் எண்ணவில்லை. கடந்த ஆட்டத்தில் தோனி பேட்டிங் செய்யாமலேயே நாங்கள் வென்றோம். அவர் இருக்கும்போது செளகரியமாக உணர்வார்கள். அணியின் முக்கிய வீரர் ஆட்டத்தில் பங்குபெறாதபோது அணியின் மனநிலையை உயர்த்துவது லேசான விஷயமல்ல. தோனி இல்லாமல் நாங்கள் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மோசமான பங்களிப்பையே வெளிப்படுத்தியுள்ளோம். தோனி இல்லாத அணியில் சில ஓட்டைகள் ஏற்படுகின்றன. அதை அடைக்க நாங்கள் முயலவில்லை எனச் சொல்லமுடியாது. அந்த ஓட்டைப் பெரிதாக உள்ளது என்பதுதான் இங்குக் கவனிக்கப்படவேண்டியது.

நமக்குச் சாதகமில்லாத சூழல் ஒன்று உருவாகும்போது அதைக் கையாளத் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் இப்போது நாங்கள் அதைச் செய்வதில்லை. என்னைக் கவலைச் செய்வது என்னவென்றால், இந்தமுறை நிகழும் தொடர்ச்சியான தவறுகள். இருந்தும் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம், எங்களுடைய பந்துவீச்சாளர்களும் தனிப்பட்டமுறையிலான ஆட்டத்திறன்களுமே காரணம்.  

இப்போது எங்களுக்கு கிடைத்துள்ள நான்கு நாள் ஓய்வைப் பயன்படுத்திக்கொள்ளப்போகிறோம். 5 நாள் ஓய்வு மும்பை அணிக்குச் சாதகமாக இருந்துள்ளது. அதேபோல நாங்களும் ஓய்வுக்குப் பிறகு சிறப்பாக விளையாடவுள்ளோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com