உலகக் கோப்பையால் அதிக பாதிப்பு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்ளும் சவால்கள்!

ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்று, 3 முறை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது...
உலகக் கோப்பையால் அதிக பாதிப்பு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்ளும் சவால்கள்!

2008-ம் வருட ஐபிஎல் போட்டியை யாராலும் மறக்கமுடியாது.

அதன் முதல் ஆட்டமும் இறுதிச்சுற்று ஆட்டமும் ரசிகர்கள் எதிர்பாராத வகையில் அமைந்தன. முதல் ஆட்டத்தில் மெக்கல்லமின் அதிரடியும் இறுதிச்சுற்றில் ராஜஸ்தான் அணி கோப்பையை வென்றதும் மறக்கக்கூடிய விஷயங்களா?

ஆனால் சென்னை அணியோடு ராஜஸ்தான் அணியும் இரண்டு ஆண்டு தடைக்காலத்தை அனுபவித்தது துரதிர்ஷ்டவசமானது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. 

எனினும் கடந்த வருடம் மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட வந்த ராஜஸ்தான் அணி லீக் சுற்றுகளின் முடிவில் எதிர்பாராத வகையில் 4-ம் இடம் பிடித்து ஃபிளேஆஃப்-புக்குத் தகுதியடைந்தது. இத்தனைக்கும் அந்த அணியின் கேப்டன் ஸ்மித் திடீரென ஐபிஎல்-லில் கலந்துகொள்ளமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டபோதிலும்.  

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி ஓரளவு நன்கு விளையாடிய அணி. ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்று, 4 முறை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது. பெங்களூர் அணி 5 முறை பிளேஆஃப்-புக்குத் தகுதியடைந்தாலும் ஒருமுறை கூட ஐபிஎல் போட்டியை வென்றதில்லை என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்கவேண்டும். மேலும் கடைசி 2 இடங்களை ஒரேயொருமுறை தான் அடைந்துள்ளது. கலந்துகொண்ட 9 ஐபிஎல் போட்டிகளில் ஒருமுறை மட்டுமே மிக மோசமாக விளையாடியுள்ளது. 

ஸ்டீவ் ஸ்மித், ரஹானே, ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், ஆஷ்டன் டர்னர் எனக் கலவையான வீரர்களை இந்த அணி கொண்டுள்ளது. கடந்த வருடம் ஐபிஎல் பிற்பாதியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர், 6 இன்னிங்ஸில் 428 ரன்கள் எடுத்து அசத்தினார். இவரால் தான் ராஜஸ்தான் அணியால் ஃபிளேஆஃப்-புக்குத் தகுதி பெற முடிந்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூதரும் அணிக்குப் பெரிய பக்கபலமாக இருக்கும் ஷேன் வார்னே ஒரு பேட்டியில், இந்த அணியைப் பார்க்கும்போது இந்தமுறை ஐபிஎல் போட்டியை ராஜஸ்தான் அணி தான் வெல்லும் என நினைக்கிறேன். சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதைப் பெறுவார் என்றும் கருதுகிறேன் எனத் தன் கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அணி இந்த வருடம் எதிர்கொள்ளவுள்ள பெரிய பிரச்னை, உலகக் கோப்பைப் போட்டி காரணமாக அணியில் உள்ள 8 வெளிநாட்டு வீரர்களில் ஸ்மித், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், டர்னர், பட்லர் போன்ற முக்கியமான வீரர்களை மே 1-க்குப் பிறகு பயன்படுத்தமுடியாமல் போய்விடும். இதனால் முதல் 10 ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி அதிக வெற்றிகளை அடைவதே பிற்பகுதியில் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற உதவும். 

ராஜஸ்தான் உத்தேச அணி: 

ரஹானே (கேப்டன்), ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி, கே கெளதம், ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உனாட்கட், வருண் ஆரோன். 

ஆட்டங்கள் - 130, வெற்றிகள் - 66
ஐபிஎல் சாம்பியன் - 2008
அதிக ரன்கள் - ரஹானே (3427 ரன்கள்)
அதிக விக்கெட்டுகள் - தவல் குல்கர்ணி (79 விக்கெட்டுகள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com