வெளியாகியுள்ள சிஎஸ்கே அணி குறித்த ஆவணப்படம்! (விடியோ)

கடந்த வருட ஐபிஎல் போட்டியை சிஎஸ்கே வென்றது குறித்து ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு...
வெளியாகியுள்ள சிஎஸ்கே அணி குறித்த ஆவணப்படம்! (விடியோ)

ஐபிஎல் 2019 போட்டி 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னையில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது. 

ஐபிஎல் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது. 

கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சூதாட்டப் புகார் தொடர்பாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கிய நிலையில் 2018- ஐபிஎல் சீசனில் பங்கேற்ற சென்னை 7-வது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கெனவே 2010, 2011-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வருட ஐபிஎல் போட்டியை சிஎஸ்கே வென்றது குறித்து ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு அது ஹாட்ஸ்டார் இணையத்தளத்திலும் அதன் செயலியிலும் வெளியாகியுள்ளது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து இதுவரை எதுவும் பேசாத தோனி, இந்த ஆவணப்படத்தில் சில கருத்துகளைக் கூறியுள்ளார். அதில் - நான் ஒரு மிகப்பெரிய குற்றம் செய்யமுடியும் எனில் அது கொலை அல்ல, மேட்ச் ஃபிக்ஸிங். மேட்ச் ஃபிக்ஸிங்கில் அணியின் பங்களிப்பு இருந்ததாகச் சொல்லப்பட்டது. நானும் குற்றம்சாட்டப்பட்டேன். எல்லோருக்கும் அது கடினமான காலம். எங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை கடுமையானது என எண்ணினார்கள் ரசிகர்கள். மீண்டும் ஐபிஎல்-லில் விளையாட வந்தது உணர்வுபூர்வமானத் தருணம். நான் எப்போதும் சொல்வதுபோல, எது உங்களைக் கொல்லாதோ, அது உங்களைப் பலசாலியாக்கும் என்று பேசியுள்ளார் தோனி. 

‘Roar of the Lion’ என்கிற சிஎஸ்கே குறித்த ஆவணப்படம் ஹாட்ஸ்டாரில் தற்போது 5 பாகங்களாக வெளியாகியுள்ளது. இதில் முதல் பாகத்தை மட்டுமே இலவசமாக ரசிகர்கள் பார்க்கமுடியும். இதர பாகங்களைப் பார்க்கக் கட்டணம் உண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com