பாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்பு கிடையாது!

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப அந்நாட்டு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்பு கிடையாது!

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப அந்நாட்டு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பி வந்த டிஸ்போர்ட் தொலைக்காட்சி நிறுவனம், தனது ஒளிபரப்பை நிறுத்தி வைத்தது. மேலும் உலகளவில் பிஎஸ்எல் போட்டியை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்திருந்த ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனமும் ஒப்பந்ததை ரத்து செய்தது. 

இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப அந்நாட்டு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஃபவாத் செளத்ரி அறிவித்துள்ளார்.

பிஎஸ்எல் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்திய நிறுவனங்களும் இந்திய அரசும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நடத்திய விதத்தைப் பார்க்கும்போது, பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாது. கிரிக்கெட்டையும் அரசியலையும் தனித்தனியே பார்க்கவே விரும்புகிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ராணுவத் தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடினார்கள். இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிபரப்பு இல்லையென்றால் அது இந்திய கிரிக்கெட்டுக்கும் ஐபிஎல்-லுக்குமே நஷ்டமாக அமையும். சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஒரு பலம் வாய்ந்த சக்தியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2019 போட்டி 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னையில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com