வான்கடேவில் வானவேடிக்கை நிகழ்த்திய பந்த்: டெல்லி அணி 213 ரன்கள் குவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி பந்த் அதிரடியால் 213 ரன்கள் குவித்துள்ளது.  
புகைப்படம்: iplt20.com
புகைப்படம்: iplt20.com


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி பந்த் அதிரடியால் 213 ரன்கள் குவித்துள்ளது.  

12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா மற்றும் தவான் களமிறங்கினர். பிருத்வி ஷா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, தவானுடன், கோலின் இங்க்ரம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டது. 

தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த இங்க்ரம் துரிதமாக ரன் சேர்த்து விளையாடினார். இதனால், டெல்லி அணியின் ரன் வேகமும் சீராக உயர்ந்தது. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் இங்க்ரம் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

மும்பையை பந்தாடிய பந்த்:

இந்த நிலையில் ரிஷப் பந்த் களமிறங்கினார். முதல் 5 பந்துகளுக்கு அடக்கி வாசித்த பந்த் அதன்பிறகு தனது அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால், அந்த நேரத்தில் தவான் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், பந்த் தனது அதிரடியை தொடர்ந்தார். அடித்தால் பவுண்டரி அல்லது சிக்ஸர் என்ற நோக்கத்துடன் விளையாடியது போல் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளிலேயே ரன் குவித்து வந்தார். 

அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்க மறுமுனையில் கீமோ பால், அக்ஸர் படேல் என வரிசையாக ஆட்டமிழக்கின்றனர். இருப்பினும், கடைசி கட்டம் என்பதால் பந்த் தொடர்ந்து சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம், வெறும் 18 பந்துகளில் அவர் அரைசதத்தை எட்டினார்.

அரைசதம் அடித்த பிறகும், ஸ்டிரைக்கை எடுத்துக்கொண்டு சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக அடித்தார் பந்த். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ராவிடமே பந்தின் அதிரடிக்கு விடை காணமுடியவில்லை. 

பந்தின் இந்த அதிரடியால், கடைசி 6 ஓவரில் மட்டும் டெல்லி அணி 99 ரன்கள் குவித்தது. இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 78 ரன்கள் எடுத்தார். அவருடைய ஸ்டிரைக் ரேட் 288.89 ஆகும். ராகுல் தெவாடியாவும் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com