காயம் காரணமாக ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஐபிஎல் வீரர்கள்!

ஐபிஎல் விதிமுறைப்படி, போட்டி தொடங்குமுன்பு பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் 50 சதவிகிதச் சம்பளம்...
காயம் காரணமாக ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஐபிஎல் வீரர்கள்!

ஐபிஎல் ஏலத்தில் கோடிக்கணக்கான தொகைக்குத் தேர்வாகியுள்ள வீரர்கள் உஷாராக இன்னொரு காரியமும் செய்துள்ளார்கள். தங்களுக்கான ஐபிஎல் சம்பளத்தைச் சேதாரம் இல்லாமல் பெற காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளார்கள்.

ஒரு ஐபிஎல் ஏலத்தில் எவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு வீரர் தேர்வானாலும், காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனால் ஏலத்தில் குறிப்பிட்ட சம்பளத்தொகையைப் பெறமுடியாமல் போகும். எனினும் ஐபிஎல் விதிமுறைப்படி, போட்டி தொடங்குமுன்பு பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் 50 சதவிகிதச் சம்பளம் அளிக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு வீரருக்குக் காயம் ஏற்பட்டு அவர் ஊர் திரும்பினாலும் அந்தத் தொகையை வைத்துக்கொள்ளலாம். ஆனால் பயிற்சியில் கலந்துகொள்ளாமல் ஐபிஎல் போட்டியிலிருந்து முழுவதுமாக விலகினால் ஒரு பைசாவும் கிடைக்காது.

இந்நிலையில் ஐபிஎல்-லில் பங்கேற்கும் வீரர்கள் புதிதாகக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து, காயம் காரணமாக ஏற்படும் வருமான இழப்பைச் சரிசெய்ய முயற்சி எடுத்துள்ளார்கள். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், செயல் இயக்குநராக உள்ள வாண்டேஜ் ஸ்போர்ட்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர்கள் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார்கள். காப்பீடு எடுத்துள்ள வீரர்களின் பெயர்களை அறிவிக்காவிட்டாலும் ஐபிஎல்-லில் கலந்துகொள்ளும் வீரர்கள் அந்த நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பேடி ஓ கிளரி கூறியதாவது: வீரர்கள் சிலர் காயம் காரணமாகப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனால் அந்த வருமான இழப்பிலிருந்து மீள்வதற்காக ரூ. 7.60 கோடிக்கும் அதிகமாகக் காப்பீடு செய்துள்ளார்கள். மற்றவர்கள் ரூ. 1.03 கோடி முதல் ரூ. 1.38 கோடி வரை காப்பீடு எடுத்துள்ளார்கள். போட்டியின் பாதியில் காயமடைந்து வெளியேறும் வீரர்களுக்கும் இந்த நிறுவனத்தில் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் என்ஜிடி காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவர் இந்நிறுவனத்தில் காப்பீடு எடுத்திருந்தால் அவருக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்காது. 

எனினும் கடந்த வருடம் இடைக்காலத் தடை காரணமாக ஸ்டீவ் ஸ்மித்தும் வார்னரும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளமுடியாமல் போனது. இதுபோன்ற தடைகளுக்குக் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்காது. 

இந்த வருடம் காப்பீடுத் திட்டத்தில் இணைந்துள்ள வீரர்கள்:

இங்கிலாந்து: சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே, சாம் கரண், ஜோ டென்லி, ஹேரி கர்னே, ஜாஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
மேற்கிந்தியத் தீவுகள்: டுவைன் பிராவோ, கீமோ பால், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், கார்லஸ் பிராத்வெயிட், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், எவின் லீவிஸ், கிரோன் பொலார்டு, ஓஷான் தாமஸ், ஷிம்ரான் ஹெட்மையர்.
தென் ஆப்பிரிக்கா: டு பிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிர், காலின் இங்க்ரம், கிறிஸ் மோரிஸ், ககிசோ ரபாடா, டேவிட் மில்லர், ஹார்டஸ் வில்ஜோன், குயிண்டன் டி காக், ஏபி டி வில்லியர்ஸ், கிளாஸன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com