யுவராஜ் ஹாட்ரிக் சிக்ஸர், பாண்டியா இமாலய சிக்ஸர்: மும்பை அணி 187 ரன்கள் குவிப்பு
By DIN | Published On : 28th March 2019 09:58 PM | Last Updated : 28th March 2019 09:58 PM | அ+அ அ- |

நன்றி: iplt20.com
பெங்களூருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி மும்பை அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தது. மும்பை அணி பவர் பிளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 7-ஆவது ஓவரை சாஹல் வீசினார். அவர் தனது முதல் ஓவரிலேயே டி காக் விக்கெட் வீழ்த்தினார். டி காக் 20 பந்துகளுக்கு 23 ரன்கள் சேர்த்தார். எனினும் ரோஹித் சர்மா துரிதமாக ரன் குவித்து வந்தார். அவருக்கு சூர்யகுமார் யாதவும் ஒத்துழைப்பு தந்து விளையாடினார். இதனால், மும்பை அணியின் ரன் ரேட் ஓவருக்கு 8-ஆக இருந்தது.
இந்நிலையில், ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, யுவராஜ் சிங் களமிறங்கினார். அவர் முதலில் சற்று நிதானத்தை காட்டினார்.
ஹாட்ரிக் சிக்ஸர்:
அதன்பிறகு, சாஹல் வீசிய 14-ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளை யுவராஜ் சிங் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு பெங்களூரு ரசிகர்களின் மனதை நொறுக்கினார். ஆனால், அவர் 4-ஆவது பந்தையும் சிக்ஸருக்கு அடிக்க முயன்று பவுண்டரி எல்லையில் சிராஜ் வசம் கேட்ச் ஆனார். இதையடுத்து, பெங்களூரு ரசிகர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர். யுவராஜ் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.
5 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை:
யுவராஜ் விக்கெட்டுக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் டி கிராண்ட்ஹோம் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அதிரடிக்கு கியரை மாற்றினார். ஆனால், சாஹல் வீசிய அடுத்த ஓவரில் அவர் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் போலார்டு 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்தடுத்த ஓவர்களில் குருணால் பாண்டியா மற்றும் மெக்லனான் தலா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.
ஹார்திக் பாண்டியா அதிரடி:
அதன்பிறகு, ஹார்திக் பாண்டியா இறுதிக்கட்டத்தில் இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு மும்பை அணிக்கு நல்ல பினிஷிங்கை தந்தார். பாண்டியாவின் அதிரடி மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹார்திக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணி சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.