ஃபார்முக்கு திரும்பிய ராகுல்: மும்பைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நன்றி: iplt20.com
நன்றி: iplt20.com


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் விவரம்: https://goo.gl/zEcLKk

இதையடுத்து, பஞ்சாப் அணி 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது. அந்த அணிக்கு கிறிஸ் கெயில் அதிரடியாக ரன் குவித்தார். அவர் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களிலேயே ரன் குவித்தார். ஆனால், கேஎல் ராகுல் துரிதமாக ரன் குவிக்க முடியாமல் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், கெயில் அதிரடியாக ரன் குவித்த போதும், அந்த அணியின் ரன் ரேட் ஓவருக்கு 7 அல்லது 8-இல் தான் இருந்தது. 

இதையடுத்து, குருணால் பாண்டியா வீசிய 8-ஆவது ஓவரில் கிறிஸ் கெயில் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் அதிரடியாக ரன் குவித்தார். இதனால், வெற்றிக்கு தேவையான ரன் ரேட் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதனால், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுலுக்கு பெரிய நெருக்கடி இல்லை. 

ஆனால், ஒரு கட்டத்தில் பவுண்டரிகளாக விளாசிய அகர்வால் 21 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுல், அகர்வால் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்ததது. அகர்வால் ஆட்டமிழந்த போது ராகுல் 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். 

ஃபார்முக்கு திரும்பிய ராகுல்:

அகர்வால் ஆட்டமிழந்த போது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவரில் 56 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அதன்பிறகு, ராகுல் அதிரடிக்கு மாறினார். பாண்டியா வீசிய 15-ஆவது ஓவரில் ராகுல் 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. இதனால், பஞ்சாப் வெற்றிக்கு தேவையான நெருக்கடி சற்று தணிந்தது. 

மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த ராகுல் 45-ஆவது பந்தில் தனது அரைசதத்தை அடித்தார். அந்த ஓவரிலும் 12 ரன்கள் குவித்ததால் கடைசி 4 ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. இதைத்தொடர்ந்து பும்ரா வீசிய ஓவரிலும் ராகுல் 2 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். 

இதன்மூலம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் 57 பந்துகளுக்கு 71 ரன்கள் எடுத்தார். மில்லர் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல்  இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com