39 பந்துகளில் கதையை மாற்றிய சிஎஸ்கே: நம்பமுடியாத அளவுக்கு ஸ்கோரை உயர்த்திய தோனி & ஜடேஜா!

14-வது ஓவரில் களமிறங்கினார் தோனி. அடுத்த 39 பந்துகளில் நிலைமையே மாறியது...
39 பந்துகளில் கதையை மாற்றிய சிஎஸ்கே: நம்பமுடியாத அளவுக்கு ஸ்கோரை உயர்த்திய தோனி & ஜடேஜா!

தில்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் விளையாடிய சென்னை அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி கேபிட்டல் அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தோனி 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரெய்னா 59 ரன்களும் ஜடேஜா 25 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்கள். ஆனால் தில்லி அணி 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிஎஸ்கேவின் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, 179 ரன்கள் எடுக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கமுடியாது. ஏனெனில் ஆரம்பம் அந்தளவுக்கு மோசமாக அமைந்தது. 

பவர்பிளே பகுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சிஎஸ்கே. அதிலும் முதல் 3 ஓவர்களில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள் சிஎஸ்கே தொடக்க வீரர்கள். வாட்சன் ஆட்டமிழந்த பிறகு ரெய்னா சில பவுண்டரிகள் அடித்ததால் பவர்பிளே-யில் ஓரளவு ரன்கள் கிடைத்தது. இந்த வருட பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுக்க சிஎஸ்கே மிகவும் சிரமப்படுகிறது. இந்த வருட ஐபிஎல்-லில் பவர்பிளேயில் மிகக்குறைவான ரன்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலுமே சிஎஸ்கேதான் உள்ளது. 10 ஓவர்களின் முடிவில் 53 ரன்கள். இதனால் சிஎஸ்கே கடைசியில் 140 ரன்கள் எடுக்கவே சிரமப்படும் என ரசிகர்கள் எண்ணினார்கள். 

14-வது ஓவரில் களமிறங்கினார் தோனி. அடுத்த 39 பந்துகளில் நிலைமையே மாறியது. சேப்பாக்கம் ரசிகர்கள் ஒவ்வொரு பவுண்டரியையும் சிக்ஸரையும் கொண்டாடினார்கள். அந்தக் கடைசி 6 ஓவர்களை அவர்கள் மறக்கமாட்டார்கள். 

முதல் 87 பந்துகளில் 81 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே, அடுத்த 39 பந்துகளில் 92 ரன்களைக் குவித்தது. 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஜடேஜாவும் தன் பங்குக்கு உதவினார். கடைசி ஓவரில் 21 ரன்கள், கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் என ரசிகர்களைத் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் திக்குமுக்காட வைத்தார் தோனி. 

தில்லி அணியின் இன்னிங்ஸ் இதற்கு நேர்மாறாக இருந்தது. அந்த அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது. ஆனால் அடுத்த 6 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து நிலைதடுமாறி இறுதியில் மோசமான தோல்விக்கு ஆளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com