என்னைத் ‘தல’ என்று யார் அழைத்தாலும் அவர் சிஎஸ்கே ரசிகர் தான்: ஹர்ஷா போக்ளேவுடனான தோனியின் சுவாரசிய உரையாடல்! (விடியோ)

தமிழ்நாட்டும் மக்கள் என்னை ஏற்றுகொண்டுள்ளார்கள். எங்குப் பார்த்தாலும் தல என்றுதான் அழைப்பார்கள்...
என்னைத் ‘தல’ என்று யார் அழைத்தாலும் அவர் சிஎஸ்கே ரசிகர் தான்: ஹர்ஷா போக்ளேவுடனான தோனியின் சுவாரசிய உரையாடல்! (விடியோ)

தில்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் விளையாடிய சென்னை அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி கேபிட்டல் அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தோனி 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரெய்னா 59 ரன்களும் ஜடேஜா 25 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்கள். ஆனால் தில்லி அணி 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிஎஸ்கேவின் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அப்போது, கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்ளேவுடன் சுவாரசிய உரையாடலில் ஈடுபட்டார் தோனி. 

தோனி பேசவந்தபோது ரசிகர்கள் தோனி தோனி... எனக் கூக்குரலிட்டார்கள். அப்போது நடைபெற்ற உரையாடல்.

ஹர்ஷா: ரசிகர்கள் இதை நிறுத்துவார்களா?

தோனி: அவர்கள் நிச்சயம் நிறுத்துவார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைக் கேட்க அவர்கள் விரும்புவார்கள்.

ஹர்ஷா: 20-வது ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது எப்படி?

தோனி: பந்தைக் கவனி, பந்தை அடித்தாடு. இதுதான் 20-வது ஓவரில் அதிரடியாக விளையாடுவதன் ரகசியம். 20-வது ஓவர் வருவதற்குள் ஆடுகளத்தின் தன்மை குறித்து உங்களுக்குப் புரிந்துவிடும். உங்களுக்குப் பலமாக இல்லாத ஷாட்களைப் பயன்படுத்தலாமா என்பதை அறிந்துகொள்ளலாம். 20-வது ஓவரின்போது இதெல்லாம் கணித்துவிட்டு, அதிரடி ஆட்டத்துக்குத் தயாராகிவிடுவீர்கள். 

ஹர்ஷா: விக்கெட் எடுத்தவுடன் இம்ரான் தாஹிர் வெளிப்படுத்தும் கொண்டாட்டம் பற்றி?

தோனி: அவர் அப்படிக் கொண்டாடுவதைப் பார்ப்பது ஆனந்தமானது. ஆனால் அவரிடம் தெளிவாகச் சொல்லிவிட்டோம்... அவர் விக்கெட் எடுத்தால் நானும் வாட்சனும் அவரிடம் செல்லமாட்டோம். ஏனெனில் அவ்வபோது அவர் அந்தப் பக்கம் ஓடிவிடுகிறார். நானும் வாட்சனும் நூறு சதவிகிதம் உடற்தகுதி இல்லாத நிலையில் அவர் பின்னால் ஓடுவது கடினமானது. நல்ல விஷயம் என்னவென்றால், அவர் தன்னுடைய ஓட்டத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிடுவார். அப்போது நாங்கள் அவரைப் பாராட்டுவோம். 

ஹர்ஷா: உங்கள் கீப்பிங் பாணியை மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பீர்களா?

தோனி: டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் போது ஏற்பட்ட பழக்கம் இது. அந்த வகை கிரிக்கெட் ஆட்டங்களை நிறைய விளையாடியுள்ளேன். அடிப்படை சரியாக இருக்கவேண்டும். அதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்துக்கு நகரலாம். 

ஹர்ஷா: ரசிகர்கள் உங்களைத் தல என்று அழைப்பது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

தோனி: இதுபோன்ற ஒரு செல்லபெயரைப் பெற்றிருப்பது சிறப்பானது. இது ஒரு பெரிய செல்லப்பெயர். இதை நான் மிகவும் விசேஷமாக உணர்கிறேன். சிஎஸ்கே பாடலில் இந்த வார்த்தை இடம்பெற்றதை நான் அறியவில்லை. பிறகு தான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். தமிழ்நாட்டும் மக்கள் என்னை ஏற்றுகொண்டுள்ளார்கள். எங்குப் பார்த்தாலும் தல என்றுதான் அழைப்பார்கள். இதரப் பகுதிகளில் யாராவது என்னை அப்படி அழைத்தால் அவர் சிஎஸ்கே ரசிகர் என அறிந்துகொள்வேன்

ஹர்ஷா: சிஎஸ்கே உரிமையாளர்களிம் பேசிவிட்டேன். அடுத்த ஏலத்திலும் அவர்கள் உங்களைத்தான் தேர்வு செய்யவுள்ளார்களாம். அதனால் உங்கள் வெற்றி ரகசியத்தை இப்போதாவது என்னிடம் கூறமுடியுமா?

தோனி: அப்படியா, அவர்கள் என்னைத் தக்கவைத்துக்கொள்வார்கள் என்றுதானே எண்ணியிருந்தேன். என்னை அவர்கள் ஏலத்தில் மீண்டும் விடுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்களிடம் இதுபற்றி விசாரித்துவிட்டு, என் தொழில் ரகசியத்தைக் கூறுகிறேன். 

தோனியின் வேடிக்கையான இந்தப் பதில் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. 

விடியோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com