பிளேஆஃப் கனவு தகர்கிறதா?:  ராஜஸ்தான் அணி 115/9; ரியான் பராக் 50 ரன்கள்!

ஐபிஎல் போட்டியில் இளம் வயதில் அரை சதம் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்...
பிளேஆஃப் கனவு தகர்கிறதா?:  ராஜஸ்தான் அணி 115/9; ரியான் பராக் 50 ரன்கள்!

தில்லி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

11 புள்ளிகள் வைத்துள்ள ராஜஸ்தான் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவேண்டுமென்றால் வேறு வழியே இல்லை. இந்த ஆட்டத்தில் ஜெயித்தால் மட்டுமே மிஞ்சியுள்ள ஒரு வாய்ப்பையும் பெறமுடியும். ஜெயித்தாலும் 13 புள்ளிகள் என்பதால் இதர அணிகளின் வெற்றி, தோல்வியில்தான் ராஜஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கிட்டும். அதற்கு, பெங்களூரிடம் ஹைதராபாத் தோற்கவேண்டும். அதேபோல மும்பையிடம் கொல்கத்தா தோற்கவேண்டும். இப்படி நடந்தால் ராஜஸ்தான் 13 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். பெங்களூரும் மும்பையும் ராஜஸ்தானுக்கு உதவுமா என்கிற கேள்விக்கு இடமில்லாமல் மிக மோசமாக விளையாடிவிட்டார்கள் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள்.

மீண்டும் கேப்டன் பதவியைப் பெற்ற ரஹானே, 2 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்துவிட்டு லிவிங்ஸ்டோன் 14 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் வெளியேறினார். இந்த ஐபிஎல்-லில் சத்தமில்லாமல் தன்னால் முடிந்த அளவுக்கு அணிக்குப் பங்களித்துள்ளார் இஷாந்த். 

2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் கவனமுடன் ஆடவேண்டிய ராஜஸ்தான் அணி மேலும் விக்கெட்டுகளை இழந்தது. நம்பிக்கை நட்சத்திரம் சாம்சன், 5 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் 8 ரன்களில் லோம்ரோரை வீழ்த்தி மீண்டும் அசத்தினார் இஷாந்த். பவர்பிளே முடிந்தபோது 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது ராஜஸ்தான். 

அடுத்த நான்கு ஓவர்கள் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள் இளம் வீரர் ரியான் பராக்கும் ஷ்ரேயஸ் கோபாலும். 12-வது ஓவரை வீசிய மிஸ்ரா அடுத்தடுத்த பந்துகளில் கோபாலை 12 ரன்களிலும் பின்னியை ரன் எதுவும் எடுக்கவிடாமலும் வீழ்த்தினார். ஹாட்ரிக்குக்கான பந்தை கெளதம் மேலே அடிக்க, நல்ல கேட்ச்சைப் பிடிக்கமுடியாமல் கோட்டை விட்டார் போல்ட். இதனால் மிஸ்ரா, ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு பறிபோனது. கெளதம் நீண்ட நேரம் நிலைக்காமல் 6 ரன்களில் மிஸ்ராவின் அடுத்த ஓவரில் வெளியேறினார். பிறகு 6 ரன்களில் சோதியும் வெளியேறினார்.

மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தபோதும் பக்குவமுடன் விளையாடினார் 17 வயது ரியான் பராக். போல்ட் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தார். 20-வது ஓவரின் கடைசிப் பந்தில் 50 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டியில் இளம் வயதில் அரை சதம் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. தில்லி அணித் தரப்பில் இஷாந்த் சர்மா, மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com