பவர்பிளேயில் சொதப்புகிறோம்: சிஎஸ்கே பயிற்சியாளர் வேதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் இந்தமுறை மிகவும் ஏமாற்றுகிறது. தோனியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை...
பவர்பிளேயில் சொதப்புகிறோம்: சிஎஸ்கே பயிற்சியாளர் வேதனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் இந்தமுறை மிகவும் ஏமாற்றுகிறது. தோனியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் ஃபார்மில் இல்லை. அதிலும் பவர்பிளேயில் (1-6 ஓவர்கள்) அதிக விக்கெட்டுகளை இழப்பதால், பின்னால் வரும் வீரர்களுக்குப் பெரும் சுமையாகிவிடுகிறது. 

இதுவரை விளையாடிய 15 ஆட்டங்களில் பவர்பிளே பகுதியில் மட்டும் 29 விக்கெட்டுகளை இழந்துள்ளது சிஎஸ்கே. ஆனால் இதற்கு நேர்மாறாக சன்ரைசர்ஸ் அணி, 14 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்!

இதுபோல சென்னை அணி பவர்பிளே பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழந்து அதிக ரன்களும் குவிக்காமல் இருந்தாலும் இத்தனை வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றதற்குக் காரணம், தோனியின் பேட்டிங்கும் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பும் தான். 

பவர்பிளேயில் வீழ்ந்த விக்கெட்டுகள்

சென்னை - 29
பெங்களூர் - 24
கொல்கத்தா - 20
தில்லி - 18
பஞ்சாப் - 17
ராஜஸ்தான் - 15
மும்பை - 13
ஹைதராபாத் - 9

சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன் வீரர் சூரியகுமார் யாதவ் அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார். 

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை சேர்த்தது சென்னை. 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடன் தோனியும், 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 42 ரன்களுடன் ராயுடுவும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த ஐபிஎல் போட்டியில் பல ஆட்டங்களில் சொதப்பியதுபோல இந்தமுறையும் சிஎஸ்கேவின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி ரசிகர்களை ஏமாற்றினார்கள். இந்தமுறையும் தோனி வந்துதான் அணியைக் காப்பாற்றி ஓரளவு ரன்கள் சேர்த்துக்கொடுத்தார். 

18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மும்பை. 10 பவுண்டரியுடன், 54 பந்துகளில் 71 ரன்களுடன் சூரியகுமார் யாதவும், 13 ரன்களுடன் ஹார்திக் பாண்டியாவும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. 

மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கூறியதாவது:

20 ஓவர்களும் சீராக ரன்கள் எடுப்பதில்தான் தடுமாறுகிறோம். இதுதான் பிரச்னையாக உள்ளது. பவர்பிளேயில் ரன்கள் எடுப்பதில் மிகவும் பின்தங்கியுள்ளோம். 6 ஓவர்கள் முதல் 20 ஓவர்கள் வரை சரியாகவே ரன்கள் எடுக்கிறோம். இன்றைய ரன்ரேட் 7, பிறகு கடைசி ஆறு ஓவர்களில் 10 என இருந்தது. சரியாகவே விளையாடினாலும் பவர்பிளேயில் சொதப்புகிறோம். முதல் 6 ஓவர்களில் 40 ரன்களாவது எடுத்தால் நல்லது, அதன்மூலம் 150-160 ரன்கள் எடுக்கமுடியும். அடுத்த ஆட்டத்தில் இதைச் சரிசெய்ய முடிகிறாதா எனப் பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com