கெதர் ஜாதவின் காயம் குணமாகும் வரை காத்திருக்க பிசிசிஐ முடிவு! 

உலகக் கோப்பைக்கான ஐசிசி விதிமுறைகளின்படி, மே 23 வரை அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம்...
கெதர் ஜாதவின் காயம் குணமாகும் வரை காத்திருக்க பிசிசிஐ முடிவு! 

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 14-வது ஓவரின்போது ஃபீல்டிங் செய்ய முயன்ற நிலையில் தடுமாறி கீழே விழுந்தார் ஜாதவ். இதில் அவருடைய தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஓய்வறைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள சிஎஸ்கே ஆட்டங்களில் ஜாதவ் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறினார். இதனால் அவர் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

உலகக் கோப்பைக்கான ஐசிசி விதிமுறைகளின்படி, மே 23 வரை அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம். இந்திய அணியின் பிஸியோ பாட்ரிக் ஃபர்ஹர்ட், ஜாதவுக்கு ஏற்பட்ட காயம் குறித்து கவனித்து வருகிறார். இதையடுத்து ஜாதவின் காயம் விரைவில் குணமாகிவிடும், இந்திய அணி இங்கிலாந்து செல்வதற்கு முன்பு அவர் நல்ல உடற்தகுதியை அடைந்துவிடுவார் என்று இந்தியத் தேர்வுக்குழுவுக்கு ஃபர்ஹர்ட் தகவல் அளித்துள்ளார்.

இந்திய அணி மே 22 அன்று இங்கிலாந்துக்குப் புறப்படுகிறது. ஜூன் 5 அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது இந்திய அணி. அதற்குள் ஜாதவின் காயம் குணமாகிவிடும் என்பதால், இந்த நிலையில் ஜாதவுக்கு ஆதரவு அளிக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. 

இதையும் தாண்டி, ஜாதவால் உலகக் கோப்பைப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனால்  ரிஷப் பந்த், அம்பட்டி ராயுடு, அக்‌ஷர் படேல், நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா ஆகிய 5 வீரர்களில் இருந்து ஒருவரை பிசிசிஐ தேர்வு செய்யும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com