ஐபிஎல் இறுதிச்சுற்றில் சிஎஸ்கேவும் மும்பையும் மோதிய தருணங்கள்!

இரு அணிகளும் நான்காவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன...
ஐபிஎல் இறுதிச்சுற்றில் சிஎஸ்கேவும் மும்பையும் மோதிய தருணங்கள்!

8-வது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள சென்னை, வரும் 12-ம் தேதி ஹைதராபாத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மோதுகிறது. இரு அணிகளும் நான்காவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.

நேற்றைய ஆட்டத்தில் தில்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 8-வது முறையாக தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் சென்னை.

ஐபிஎல் 2019 ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ்-தில்லி கேபிடல்ஸ் அணிகள் இடையிலான குவாலிபையர் 2 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை சேர்த்தது தில்லி. ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 38 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். சென்னை தரப்பில் தீபக் சஹார் 2-28, ஹர்பஜன் சிங் 2-31, ரவீந்திர ஜடேஜா 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை தரப்பில் களமிறங்கிய வாட்ஸனும், டூபிளெஸ்ஸிஸும் இந்தமுறை பொறுப்புடன் விளையாடியதால் பவர்பிளேயில் சென்னை அணி விக்கெட் எதுவும் இழக்கவில்லை. 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 50 ரன்களுடன் டூபிளெஸ்ஸிஸும், 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 50 ரன்களுடன் வாட்ஸனும் ஆட்டமிழந்தார்கள். 19 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து வென்றது சென்னை. 

ஐபிஎல் இறுதிச்சுற்றில் சிஎஸ்கேவும் மும்பை அணியும் இதுவரை 3 முறை மோதியுள்ளன. அந்த மூன்றில் மும்பை  இரண்டு ஆட்டங்களிலும் சென்னை ஒருமுறையும் வென்றுள்ளன.

1. 2010: சிஎஸ்கே 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் 168/5 (ரெய்னா 57*, தோனி 22, ஃபெர்னாண்டோ 2-23) மும்பை இந்தியன்ஸ் 146/9 (டெண்டுல்கர் 48, பொலார்ட் 27, ஜகாதி 2-27)

லீக் சுற்றில் முதலாவதாக வந்த மும்பைக்கு மூன்றாவது இடம் பிடித்த சென்னைக்கும் இடையேயான ஐபிஎல் இறுதிச்சுற்று. இதனால் பலரும் மும்பை அணியின் வெற்றியையே எதிர்பார்த்தார்கள். 

முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணி, 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 8 ஓவர்களில் 100 ரன்கள் குவித்தது. அதில் ரெய்னா மட்டும் 44 ரன்கள் எடுத்தார். 

மும்பை அணி பேட்டிங் செய்தபோது சச்சின் மட்டுமே அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். அபிஷேக் நாயரும் ஹர்பஜன் சிங்கும் மூன்றாவது, நான்காவதாகக் களமிறங்கியும் பலனில்லாமல் போனது. 

மும்பையில் மும்பைக்கு எதிராக விளையாடி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே. சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

2. 2013: மும்பை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் 148/9 (பொலார்ட் 60*, பிராவோ 4-42, மார்கல் 2-12) சென்னை சூப்பர் கிங்ஸ் 125/9 (தோனி 63*, ஜான்சன் 2-19, ஹர்பஜன் 2-14) 

மும்பை அணியின் முதல் ஐபிஎல் கோப்பை.

முதலில் விளையாடிய மும்பை அணி, 10-வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் பொலார்ட் மொத்தக் கதையையும் மாற்றினார். 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ராயுடு 37 ரன்கள்.

சென்னை அணி பேட்டிங்கில் சொதப்பியது. ரெய்னாவும் பத்ரிநாத்தும் டக் அவுட் ஆனார்கள். 7-வதாகக் களமிறங்கிய தோனி மட்டுமே 45 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். 

இந்த வெற்றியுடன் ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறினார் சச்சின் டெண்டுல்கர். 

3. 2015: மும்பை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் 202/5 (சிம்மன்ஸ் 68, ரோஹித் சர்மா 50, பிராவோ 2-36) சென்னை சூப்பர் கிங்ஸ் 161/8 (ஸ்மித் 57, மெக்லெனகன் 3-25, ஹர்பஜன் 2-34)

இந்தமுறையும் முதலில் விளையாடிய மும்பை 202 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் சிம்மன்ஸும் நடுவரிசை வீரர்களும் சிறப்பாக விளையாடி சென்னை அணியைத் திணறடித்தார்கள். 

சென்னை அணி பேட்டிங்கில் மிகவும் தடுமாறியது. தொடக்க வீரர் ஸ்மித் மட்டும் 48 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் விருதைப் பெற்று கோப்பையையும் கைப்பற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com