சுடச்சுட

  
  dhoni,_rohit

   

  ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இரு அணிகளின் ரசிகர்களும் சற்றும் சளைக்காமல் தங்கள் அணிகளின் பெருமைகளை தொடர்ந்து பதிவிடுவதும், அதற்கு எதிர்தரப்பு பதிலடி அளிப்பதுமாக இருக்கும். 

  இந்நிலையில், இவ்விரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் அனலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் ஆடவுள்ளது. 2008-ஆம் தொடக்க சீசன் முதல் தோனி தலைமையில் ஆடி வரும் இந்த அணி 2010, 2011, 2018 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அது தவிர பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தற்போது வரை 10 முறை தகுதி பெற்றுள்ளது. மேலும் இறுதி ஆட்டத்துக்கு 8 முறை முன்னேறியுள்ளது.

  இவை மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரையும் 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதிலும் 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் என இரு கோப்பைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

  சூதாட்டப் புகார் எதிரொலியாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டும் கடந்த சீசனில் பங்கேற்று மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று, அசைக்கமுடியாத அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 

  ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை இறுதி ஆட்டத்தில் நுழைந்ததில் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் 2013, 2015-இல் சென்னைக்கு எதிராக வென்றதும் அடங்கும். மேலும் 2011, 2013-இல் சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்ற சிறப்பை பெற்றது.

  ஐபிஎல் போட்டித் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதியதில் 16-11 என்ற வெற்றிக் கணக்குடன் மும்பை இந்தியன்ஸ் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் நாக்-அவுட் சுற்றுகளில் இரு அணிகளும் தலா 4 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது. ஆனாலும், இறுதிப் போட்டியில் 2-1 என மும்பை இந்தியன்ஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.

  குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடர் உட்பட தோனி தலைமையிலான அணியுடன் 5 முறை இறுதிப்போட்டியில் களம்கண்டுள்ளது. அவற்றில் 2010, 2013, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணியுடனும் 2017-ஆம் ஆண்டு ரைஸிங் புணே சூப்பர்ஜெயின்ட் அணியுடனும் மோதியுள்ளது.

  8 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 5 முறை மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 13 இறுதிப்போட்டிகளில் களம்கண்டுள்ளது. அவற்றில் இவ்விரு அணிகளும் இணைந்து 6 ஐபிஎல் கோப்பைகளை தன்வசப்படுத்தியுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai