கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை.. அவுட்டாக்கிய மலிங்கா: 1 ரன் வித்தியாசத்தில் கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.  
நன்றி: iplt20.com
நன்றி: iplt20.com


ஐபிஎல் இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.  

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. 

மும்பை பேட்டிங் விவரம்: http://bit.ly/2Vkk7K3

150 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணி முதல் மூன்று ஓவர்களில் நிதானமாக விளையாடினாலும், டு பிளெஸ்ஸி 4-வது ஓவரில் மிரட்டினார். க்ருணால் பாண்டியாவின் அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி அடித்தார். ஆனால், அதே ஓவரில் அவர் ஆட்டமும் இழந்தார். டு பிளெஸ்ஸி 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, வாட்சன் மலிங்கா ஓவரில் 15 ரன்கள் குவிக்க ரன் ரேட் உயர்ந்தது. இதனால், வாட்சனும் ரெய்னாவும் அடுத்து வீசிய ராகுல் சஹார் பூம்ரா ஓவரில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இந்த நிலையில் ராகுல் சஹார் வீசிய 10-வது ஓவரில் ரெய்னா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 1 ரன்னுக்கு பூம்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, தோனியும் அவசியமற்ற ரன்னை எடுப்பதற்காக ஓட நூலிழையில் ரன் அவுட் ஆனார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

முக்கியமான கட்டத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அடுத்த 2 ஓவர்களில் வாட்சன் மற்றும் பிராவோ வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 

இதன்மூலம், கடைசி 5 ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டது. 

இந்நிலையில், மலிங்காவின் ஓவரை பிராவோ மற்றும் வாட்சன் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். பிராவோ ஒரு சிக்ஸரும், வாட்சன் மூன்று பவுண்டரிகளும் அடிக்க அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தது. வாட்சனும் இந்த ஓவரில் தனது அரைசதத்தை எட்டினார்.  

24 பந்துகளில் 42 ரன்கள் தேவை...

அதன்பிறகு, அடுத்த ஓவரை பூம்ரா சிறப்பாக வீச வாட்சனும், பிராவோவும் பவுண்டரி அடிக்கவில்லை. இதனால், அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் தான் கிடைத்தது. 

18 பந்துகளில் 38 ரன்கள் தேவை...

18-வது ஓவரை க்ருணால் பாண்டியா வீசினார். இநத் ஓவரை ஹார்திக் பாண்டியாவிடம் கொடுத்திருக்க வேண்டும். அதற்கு பலனாக வாட்சன் அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். இதனால், அந்த ஓவரிலும் சென்னை அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. 

12 பந்துகளில் 18 ரன்கள் தேவை...

19-வது ஓவரை பூம்ரா வீசினார். தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசி வந்த பூம்ரா 2-வது பந்தில் பிராவோ விக்கெட்டை வீழ்த்தினார். பிராவோ 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, அந்த ஓவரில் ஜடேஜா 4 ரன்கள் எடுத்தார். ஆனால், கடைசி பந்தை ஜடேஜா விட, கீப்பர் டி காக்கும் அந்த பந்தை தவறவிட்டார். இதனால், பவுண்டரி கிடைத்தது. இதன்மூலம், அந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. 

6 பந்துகளில் 9 ரன்கள் தேவை...

கடைசி ஓவரை மலிங்கா வீசினார். முதல் பந்தில் வாட்சன் ஒரு ரன் எடுக்க, 2-வது பந்தில் ஜடேஜாவும் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் வாட்சன் 2 ரன்கள் எடுக்க கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 

3 பந்துகளில் 5 ரன்கள் தேவை...

4-வது பந்தில் வாட்சன் 2 ரன்கள் எடுக்க முயன்று 2-வது ரன் எடுக்கும் போது ரன் அவுட் ஆனார். இதனால், அந்த பந்தில் 1 ரன் தான் கிடைத்தது. வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், கடைசி 2 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்குர் களமிறங்கினார். 5-வது பந்தில் ஷர்துல் 2 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. 

ஐபிஎல் இறுதிப்போட்டியின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என போட்டி விறுவிறுப்பின் உச்சத்துக்கு சென்றது. 

இதையடுத்து, கடைசி பந்தை மலிங்கா மெதுவாக வீச அது எல்பிடபிள்யு ஆனது. இதனால் , மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com