ராயுடு, டூ பிளெஸ்ஸி அரைசதம்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அசத்தல் வெற்றி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயுடுவின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராயுடு, டூ பிளெஸ்ஸி அரைசதம்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அசத்தல் வெற்றி


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயுடுவின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று (சனிக்கிழமை) மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில், முதல் விக்கெட்டாக ஷேன் வாட்சன் 5 ரன்களுக்கு போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே முரளி விஜய் பேட்டின்சன் பந்தில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால் வெறும் 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, டூ பிளெஸ்ஸி மற்றும் ராயுடு இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 6-வது ஓவரில் பூம்ரா நோ பால் வீச, அதன் ப்ரீ ஹிட்டில் ராயுடு சிக்ஸர் அடித்தார். இதன்பிறகு, ராயுடு துரிதமாக ரன் சேர்க்க, டூ பிளெஸ்ஸி பாட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை 10-க்கு மிகாமல் பார்த்துக் கொண்டனர்.

பவுண்டரிகளாக அடித்து வந்த ராயுடு இந்த ஐபிஎல் சீசனின் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த நிலையில், ராகுல் சஹார் வீசிய 16-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார் ராயுடு. அவர் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு, இடக்கை பேட்ஸ்மேன் என்பதால் ஜடேஜாவைக் களமிறக்கினார் தோனி. வந்த வேகத்தில் 2 பவுண்டரிகள் அடித்து 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மீண்டும் இடக்கை பேட்ஸ்மேனையே தோனி களமிறக்கினார். இவர் சென்னையின் வெற்றியை எளிதாக்கும் வகையில் க்ருணால் பாண்டியா ஓவரில் 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்து மிரட்டினார். அடுத்து பூம்ரா வீசிய முதல் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்க சென்னைக்கு 11 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்த நிலையில் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்தார். இதன்பிறகே, தோனி களமிறங்கினார்.

எனினும், டூ பிளெஸ்ஸி அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார். இதற்கு அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க டூ பிளெஸ்ஸியும் அரைசதத்தை எட்டினார். இதையடுத்து, கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

போல்ட் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டூ பிளெஸ்ஸி பவுண்டரி அடிக்க ஆட்டம் சமநிலை அடைந்தது. அடுத்த பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி அடிக்க சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டூ பிளெஸ்ஸி 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்த வெற்றி தோனிக்கு சி.எஸ்.கே.வின் கேப்டனாக 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com