பிளேஆஃப் வாய்ப்பைப் பறித்த ஷார்ட் ரன் விவகாரம்: கே.எல். ராகுல் வருத்தம்

எங்களுடைய முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் ரன் விவகாரம் எங்களை மிகவும் பாதித்துவிட்டது...
பிளேஆஃப் வாய்ப்பைப் பறித்த ஷார்ட் ரன் விவகாரம்: கே.எல். ராகுல் வருத்தம்

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் ரன் விவகாரம், தங்களுடைய பிளேஆஃப் வாய்ப்பைப் பாதித்துள்ளதாக பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்தது.

முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. பின்னா், ஆடிய பஞ்சாப் அணியும் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சோ்க்க ஆட்டம் டையானது. இதையடுத்து, நடைபெற்ற சூப்பா் ஓவரில் தில்லி அணி வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரில் மயங்க் அகர்வாலும் ஜார்டனும் இரு ரன்கள் ஓடி எடுத்தார்கள். ஆனால் ஓடி முடிக்கும்போது கிரீஸை பேட் தொடாததால் ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார் நடுவர் நிதின் மேனன். ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்குத் தெரிந்தது. கடைசியில் ஆட்டம் சமன் ஆனதில் நடுவர் முடிவு பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த இரண்டு ரன்களை அவர் வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி தில்லியைத் தோற்கடித்திருக்கும். 

நடுவரின் இந்த முடிவுக்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ட்விட்டரில் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது: ஆட்ட நாயகன் விருதுத் தேர்வை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு ரன்னைக் குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது அளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தியாசப்படுத்திவிட்டது என்று கூறினார். நடுவர் நிதின் மேனனின் தவறான முடிவை எதிர்த்து பஞ்சாப் அணி மேல்முறையீடு செய்தது.

இதுதொடர்பாக பஞ்சாப் அணியின் தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் மேனன், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆட்ட நடுவர் ஸ்ரீநாத்திடம் இதுகுறித்து மேல்முறையீடு செய்துள்ளோம். தனிமனித தவறு நடக்கும் என்றாலும் ஐபிஎல் போன்ற உலகத்தரமான போட்டியில் இதுபோன்ற மனிதத்தவறுகளுக்கு இடமில்லை. இந்தத் தவறால் எங்களுடைய பிளேஆஃப் வாய்ப்பு பாதிக்கப்படலாம். நடுவரின் முடிவுகளைக் கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் தனிமனிதத் தவறுகளைக் களைய முடியும் என்றார். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது பஞ்சாப் அணி. அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 18.5 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வென்றது.

14 ஆட்டங்களில் 12 புள்ளிகள் எடுத்துள்ள பஞ்சாப் அணி, 6-ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஷார்ட் ரன் விவகாரத்தால் பிளேஆஃப் வாய்ப்பு பாதிக்கப்பட்டதாக பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டியளித்துள்ளார். தோல்விக்குப் பிறகு அவர் கூறியதாவது:

பல விஷயங்கள் வேறுவிதமாக நடந்திருக்கலாம். இது ஏமாற்றத்தை அளிக்கிறது. பல ஆட்டங்களில் நாங்கள் சாதகமான நிலையில் இருந்தோம். ஆனால் வெற்றிக்கோட்டை எங்களால் தொட முடியாமல் போனது. இதற்கு முழுப்பொறுப்பும் நாங்கள் தான். எங்களுடைய முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் ரன் விவகாரம் எங்களை மிகவும் பாதித்துவிட்டது. எல்லோரும் தவறுகள் செய்வோம். இந்தமுறை ஓர் அணியாக சில தவறுகளை நாங்கள் செய்துள்ளோம். அதை ஏற்றுக்கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு நகரவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com