ஐபிஎல் போட்டியில் கவனம் பெற்ற நடராஜன்: இந்திய டி20 அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா?

கிரிக்கெட் வட்டாரத்தில் நடராஜனின் புகழ் அதிகமாகியுள்ளது... 
ஐபிஎல் போட்டியில் கவனம் பெற்ற நடராஜன்: இந்திய டி20 அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா?

ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி கவனம் ஈர்த்துள்ளார் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இதனால் இந்திய டி20 அணியில் விரைவில் தேர்வாகக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. 

2017-ல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ரூ. 40 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகச்சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி அனைவர் கவனத்தையும் கவர்ந்தார் நடராஜன். 

ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.02. 

யார்க்கர் பந்தை வீசுவது மிகவும் கடினம் என அனைவரும் எண்ணுகிற நிலையில் அதில் நிபுணத்துவம் பெற்றுள்ள நடராஜனின் பந்துவீச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் தில்லி அணி நிச்சயம் 200 ரன்களைக் கடந்துவிடும் என அனைவரும் எண்ணியபோது தனது தொடர்ச்சியான யார்க்கர் பந்துகளால் அதைத் தடுத்தார் நடராஜன். கடைசிப் பகுதியில் இரு ஓவர்களை வீசிய நடராஜன், கடைசி 10 பந்துகளில் ஒரு பவுண்டரியும் கொடுக்காமல் அற்புதமாகப் பந்துவீசினார். இதனால் தில்லி அணியால் 189 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இந்திய அணியில் விளையாடாத ஒரு வீரர், இந்த அளவுக்குத் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசுவதை இதுவரை பார்த்ததில்லை என நடராஜனைப் பாராட்டி நேற்று ட்வீட் வெளியிட்டார் முன்னாள் வீரர் இர்பான் பதான். 

இதுதவிர ஐபிஎல் போட்டி முழுக்க நடராஜனைப் பாராட்டி பலரும் ட்வீட் செய்துள்ளார்கள். இதனால் கிரிக்கெட் வட்டாரத்தில் நடராஜனின் புகழ் அதிகமாகியுள்ளது. 

உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸி. முன்னாள் வீரர் பிரெட் லீ, நடராஜன் பற்றி ட்விட்டரில் கூறியதாவது:

கடைசிப் பகுதியில் இப்படித்தான் பந்துவீச வேண்டும். அபாரம் நடராஜன் என்றார்.

இந்திய முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்ததாவது: நடராஜனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். யார்க்கர் பந்துகளை அற்புதமாக வீசியுள்ளார் என்றார். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் தேர்வாகியுள்ளார். எனினும் நடராஜனை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகமாகியுள்ளன. பும்ராவுடன் இணைந்து கடைசி ஓவர்களில் நடராஜன் பந்துவீசினால் ஆஸி. அணிக்கு நெருக்கடி தர முடியும் எனப் பலரும் எண்ணுகிறார்கள். இதனால் இந்திய அணியில் எந்தவொரு பந்துவீச்சாளருக்காவது காயம் ஏற்பட்டால் நடராஜனை தேர்வுக்குழு நிச்சயம் தேர்வு செய்யும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com