புதிய ஐபிஎல் அணியை வாங்க நடிகர் மோகன் லால் முயற்சி?

ஐபிஎல் போட்டியில் புதிதாக இணையவுள்ள 9-வது அணியைப் பிரபல நடிகர் மோகன் லால்...
புதிய ஐபிஎல் அணியை வாங்க நடிகர் மோகன் லால் முயற்சி?

ஐபிஎல் போட்டியில் புதிதாக இணையவுள்ள 9-வது அணியைப் பிரபல நடிகர் மோகன் லால் வாங்க முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

2021 ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒரு அணி இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (சர்தார் படேல் மைதானம்) கட்டப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஒரு ஐபிஎல் அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி 2021 ஐபிஎல் போட்டியில் குஜராத் சார்பாக ஓர் அணி புதிதாக உருவாக்கப்படவுள்ளது. 

இதனால் ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஐபிஎல் ஏலத்தை நடத்தவுள்ளது பிசிசிஐ. இதனால் தற்போதுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் அறியப்படுகிறது.

இந்நிலையில் இறுதி ஆட்டத்தின்போது மைதானத்துக்கு மலையாள நடிகர் மோகன் லால் வருகை தந்தார். சமீபத்தில் 46 நாள்களில் த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன் லால், உடனடியாக துபைக்குப் புறப்பட்டுச் சென்றார். தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் ஓய்வு எடுக்க துபைக்குச் செல்வதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், ஐபிஎல் போட்டியில் உருவாகவுள்ள புதிய அணியை வாங்குவது தொடர்பாகப் பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் பேச்சுவார்த்தை நடத்தவே மோகன் லால் துபைக்குச் சென்றுள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, 9-வது ஐபிஎல் அணியை வாங்க மோகன் லாலும் பைஜூ நிறுவனமும் போட்டியிடுவதாகவும் அறியப்படுகிறது. 

எனினும் 9-வது அணி குறித்து பிசிசிஐ அமைப்போ அதனை வாங்குவது குறித்து மோகன் லாலோ இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com