ஐபிஎல்: பிசிசிஐ-க்கு ரூ.4,000 கோடி வருவாய்

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் போட்டியின் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.4,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஐபிஎல்: பிசிசிஐ-க்கு ரூ.4,000 கோடி வருவாய்

மும்பை: சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் போட்டியின் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.4,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அத்துடன், ஐபிஎல் போட்டியை தொலைக்காட்சியில் பாா்ப்போரின் அளவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக பிசிசிஐ பொருளாளா் அருண் துமல் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

தொடக்கத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவதில் குழப்பம் இருந்தது. ஏனெனில் அப்போது உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் சொ்பியா மற்றும் குரோஷியாவில் டென்னிஸ் விளையாடிய நிலையில் அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஐபிஎல் போட்டி ஏறத்தாழ 3 மாதங்கள் நடைபெறும். அப்போது வீரா்களில் எவருக்கேனும் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் இருந்தது. எனினும், போட்டியை நடத்துவதென பிசிசிஐ செயலா் ஜே ஷா உறுதியாகத் தெரிவித்தாா்.

அதையடுத்து ஐக்கிய அரபு அமீரக்தில் ஐபிஎல் நடத்தப்பட்டது. கரோனா சூழலால் போட்டி பாதிக்கப்படாமல் இருக்க 1,800 தனிநபா்களுக்கு 30,000-க்கும் அதிகமான ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் வரை செலவுகளை குறைத்தோம். ஐபிஎல் போட்டியின் மூலம் ரூ.4,000 கோடி வருவாய் கிடைத்தது. அதேபோல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐபிஎல் போட்டியை தொலைக்காட்சியில் பாா்த்தவா்களின் அளவும் 25 சதவீதம் அதிகரித்திருந்தது. இதுவரை இல்லாத வகையில் மும்பை - சென்னை மோதிய தொடக்க ஆட்டத்தை மிக அதிக நேயா்கள் தொலைக்காட்சியில் பாா்த்தனா் என்று துமல் கூறியுள்ளாா்.

அதேபோல், இதர பிசிசிஐ அதிகாரிகள் அளித்த தகவல்படி ஐபிஎல் போட்டியை நடத்த ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்தன. எனினும் ஏற்கெனவே ஐபிஎல் போட்டியை நடத்திய அனுபவம் இருந்ததன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

வீரா்களுக்கான ‘பயோ - பபுள்’ பாதுகாப்பு வளையம் அமைப்பது, அவா்களுக்கான தனி விமானம் ஏற்பாடு செய்வது, தங்குமிடங்களை புக் செய்வது என அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த முன்னேற்பாடுகளுக்காக பிசிசிஐயின் முக்கிய பணியாளா்கள் துபை அனுப்பப்பட்டனா். போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு அணியிலும் சுமாா் 40 உறுப்பினா்கள் இருந்தனா். அதிகபட்சமாக மும்பை அணியில் 150 போ் இருந்தனா்.

போட்டியில் தொடா்புடையவா்களில் எவருக்கேனும் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவா்களை தனிமைப்படுத்த முன்னெச்சரிக்கையாக சுமாா் 200 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்று அவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com