கடைசி ஓவர் வரை பயம் காட்டிய கொல்கத்தா: தில்லி த்ரில் வெற்றி

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 210 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கடைசி ஓவர் வரை பயம் காட்டிய கொல்கத்தா: தில்லி த்ரில் வெற்றி


13-வது ஐபிஎல் சீசனின் 16-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.

229 ரன்கள் என்ற கடின இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இல்லாத நரைன் இந்த முறையும் சோபிக்காமல் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நோர்க்கியா பந்தில் போல்டானார்.

இதையடுத்து, கில் மற்றும் நிதிஷ் ராணா பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். கில் சற்று அதிரடியாக விளையாட முடியாமல் திணறினார். எனினும், ராணா அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தி வந்தார். இந்த நிலையில் 28 ரன்கள் எடுத்திருந்த கில் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரஸல் ரபாடா ஓவரில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து அடுத்த பந்திலேயே 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரஸல் விக்கெட்டுக்குப் பிறகு ரன் ரேட்டில் லேசான குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் அரைசதம் அடித்த ராணா 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் பேட் கம்மின்ஸும் ஆட்டமிழக்க ஆட்டம் தில்லி பக்கம் சென்றது.

மிரட்டல் மார்கன்:

ஆனால், மார்கன் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தில்லியை எச்சரித்தார். ஹர்ஷல் படேல் வீசிய 15-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைக்க கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 92 ரன்கள் தேவைப்பட்டன.

ரபாடா வீசிய 16-வது ஓவரில் மார்கன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன. 

17-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். அந்த ஓவரில் திரிபாதி 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடிக்க 24 ரன்கள் கிடைத்தன. 18-வது ஓவரை ரபாடா வீச முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மிரட்டினார் மார்கன். இதனால், 23 ரன்கள் கிடைக்க கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டன.

இந்த நிலையில், நோர்க்கியா 19-வது ஓவரை வீசினார். இவர் சிறப்பாக வீசிய 3-வது பந்தில் மார்கன் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதனால், அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து, கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டன. 

கடைசி ஓவரை மீண்டும் ஸ்டாய்னிஸ் வீச முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மிரட்டினார் திரிபாதி. ஆனால், அடுத்த பந்தை யார்க்கராக வீச திரிபாதி போல்டானார். அவர் 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இந்த விக்கெட்டுக்குப் பிறகு ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம், தில்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தில்லி அணித் தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும், மிஸ்ரா மற்றும் ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com