கடைசி கட்டத்தில் மிரட்டிய தில்லி வேகங்கள்: 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 148 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கடைசி கட்டத்தில் மிரட்டிய தில்லி வேகங்கள்: 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 148 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். இந்த இணை அதிரடியான தொடக்கம் தர முதல் 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 37 ரன்கள் எடுத்தது. ஆனால், 3-வது ஓவர் முடிவில் பட்லர் நோர்க்கியா பந்தில் போல்டானார். அவர் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்டோக்ஸும், சஞ்சு சாம்சனும் பாட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை 8-ஐத் தொடாதவாறு கவனித்துக் கொண்டனர். இந்த நிலையில், பெரிய பாட்னர்ஷிப்பாக அமைய வேண்டிய நேரத்தில் ஸ்டோக்ஸ் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே சாம்சனும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ராஜஸ்தானுக்கு மற்றுமொரு நெருக்கடியாக ரியாக் பராக் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், உத்தப்பா மற்றும் தெவாதியா பாட்னர்ஷிப்பில் பெரிதளவு பவுண்டரிகள் போகவில்லை.

கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், ஓரளவு அதிரடி காட்டி வந்த உத்தப்பாவும் (27 பந்துகளில் 32 ரன்கள்) நோர்க்கியா வேகத்தில் போல்டானார். இந்த ஓவரை நோர்க்கியா சிறப்பாக வீசியதால் வெறும் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 

கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரை ரபாடா வீசினார். அவரும் சிறப்பாக வீச அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தன. குறிப்பாக ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால், கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன.

கடைசி ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்து வைடாக போக 6 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டன. முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க, 3-வது பந்தில் ரன் ஏதும் இல்லை. 4-வது 1 ரன், 5-வது பந்தில் ஷ்ரேயஸ் கோபால் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஷ்ரேயஸ் கோபாலும் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. 

இதன்மூலம், தில்லி கேபிடல்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தெவாதியா 18 பந்துகளில் 14 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 39 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், தில்லி பந்துவீச்சாளர்கள் வெறும் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

தில்லி தரப்பில் நோர்க்கியா, துஷார் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், அக்சர் மற்றும் ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com