வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்: பெங்களூரை இன்று எதிர்கொள்கிறது

ஒரேயொரு வெற்றிக்குப் பிறகு முற்றிலும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 31-ஆவது ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.  
வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்: பெங்களூரை இன்று எதிர்கொள்கிறது

ஷார்ஜா: ஒரேயொரு வெற்றிக்குப் பிறகு முற்றிலும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 31-ஆவது ஆட்டத்தில் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. 

இரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடிய நிலையில் பஞ்சாப் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. பெங்களூர் 5 வெற்றிகளை பெற்று பலமான அணியாகத் திகழ்கிறது. பஞ்சாப் பதிவு செய்த ஒரு வெற்றியும் பெங்களூருக்கு எதிரானதாகும். 

புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருக்கும் பஞ்சாபை பொருத்தவரை, ஆல்-ரவுண்டர்கள் இல்லாதது, வெற்றியை நெருங்கி பிறகு தோற்பது இரு முக்கிய பிரச்னைகளாகும். எனினும், அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயங்களில் ஒன்று, கிறிஸ் கெயில் இந்த ஆட்டம் முதல் களம் காண இருக்கிறார். ஷார்ஜா போன்ற சிறிய மைதானங்கள் கெயில் போன்ற வீரர்கள் சிக்ஸர்கள் விளாசுவதற்கு சாதகமான இடமாக உள்ளது. 

எனினும், நடப்பு சீசனில் இதுவரை விளையாடாத கெயில் முதல் ஆட்டத்திலேயே அதிரடியாக ஆட இயலுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கெயிலை பிளேயிங் லெவனுக்கு கொண்டுவர வேண்டுமானால், அதில் ஒருவருக்கு ஓய்வளிக்கப்பட வேண்டும். 

தடுமாற்றத்துடன் ஆடிவரும் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வளிப்பது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அல்லது வெளிநாட்டு பெளலர்களில் ஒருவருக்கோ, இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கோ பதிலாகவோ கெயிலை சேர்க்கலாம். 
அதிக ரன்கள் விளாசும் கேப்டன் லோகேஷ் ராகுல், தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஆகியோர் இருந்தும் சேஸிங்கில் பஞ்சாப் பின்தங்குகிறது. பெளலிங்கில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் தவிர இதர பெளலர்கள் ஜொலிக்கவில்லை. 

பெங்களூர் அணியைப் பொருத்தவரை, முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் எதிர்கொண்டதை விட தற்போது மிகச் சவாலான அணியாக உருவெடுத்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் பெங்களூரின் பெளலிங் பிரிவும் வலுவானதாக மாறியுள்ளது. வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், கிறிஸ் மோரிஸ் உள்ளிட்டோர் அதற்காக சிறப்பாக பங்களிப்பு செய்கின்றனர். 
ஃபிஞ்ச், தேவ்தத், கோலி, டி வில்லியர்ஸ் என எதிரணி பெளலிங்கை சிதறடிக்கும் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையும் பெங்களூரில் இருக்கிறது. கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக இதே மைதானத்தில் வெற்றியை பதிவு செய்த பெங்களூர், பஞ்சாபைக் காட்டிலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப துல்லியமாகத் திட்டமிட வாய்ப்புள்ளது. 


பெங்களூர் (உத்தேச அணி)

விராட் கோலி (கேப்டன்), 
டி வில்லியர்ஸ், பார்த்திவ் படேல், 
ஆரோன் ஃபிஞ்ச், ஜோஷ் பிலிப், 
கிறிஸ் மோரிஸ், மொயீன் அலி, 
முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது, 
தேவ்தத் படிக்கல், யுவேந்திர சாஹல், 
நவ்தீப் சைனி, டேல் ஸ்டெயின், 
பவன் நெகி, இசுரு உதானா, 
ஷிவம் துபே, உமேஷ் யாதவ், 
குர்கீரத்சிங் மான், வாஷிங்டன் சுந்தர், 
பவன் தேஷ்பாண்டே, ஆடம் ஸம்பா.


பஞ்சாப் (உத்தேச அணி)

லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஹர்பிரீத் பிரார், இஷான் பொரெல், மன்தீப் சிங், ஜேம்ஸ் நீஷம், தஜிந்தர் சிங், கிறிஸ் ஜோர்டான், கருண் நாயர், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல், முஜீப்-உர்-ரஹ்மான், சர்ஃப்ராஸ் கான், ஷெல்டன் காட்ரெல், 
மயங்க் அகர்வால், முகமது ஷமி, 
தர்ஷன் நல்கண்டே, நிகோலஸ் பூரன், 
கிறிஸ் கெயில், முருகன் அஸ்வின், 
ஜெகதீஷா சுசித், கிருஷ்ணப்பா கெளதம், 
ஹார்டஸ் வில்ஜோன், சிம்ரன் சிங். 


நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் பஞ்சாப்-பெங்களூர் அணிகள் இதுவரை 
24 முறை மோதிக்கொண்ட நிலையில், பஞ்சாப் 13 வெற்றிகளையும், பெங்களூர் 11 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com