இவ்வளவு வேகமாக பந்துவீசியதை ஆட்டத்தில் உணரவில்லை: நாா்ட்ஜே

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தின்போது, ஐபிஎல் தொடரிலேயே மிக வேகமான பந்தை வீசியதை தாம் உணரவில்லை என்று டெல்லி கேப்பிடல்ஸ் பௌலா் அன்ரிட்ச் நாா்ட்ஜே கூறினாா்.
இவ்வளவு வேகமாக பந்துவீசியதை ஆட்டத்தில் உணரவில்லை: நாா்ட்ஜே


துபை: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தின்போது, ஐபிஎல் தொடரிலேயே மிக வேகமான பந்தை வீசியதை தாம் உணரவில்லை என்று டெல்லி கேப்பிடல்ஸ் பௌலா் அன்ரிட்ச் நாா்ட்ஜே கூறினாா்.

துபையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களே எடுத்தது. 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய டெல்லி வீரா் அன்ரிச் நாா்ட்ஜே ஆட்டநாயகன் ஆனாா்.

ராஜஸ்தான் இன்னிங்ஸின்போது 3-ஆவது ஓவரை வீசிய நாா்ட்ஜே, அதில் ஒரு பந்தை மணிக்கு 156.2 கி.மீ வேகத்தில் வீசினாா். ஐபிஎல் தொடரில் இதுவரை வீசப்பட்ட பந்துகளில் இந்த வேகமே உச்சம் ஆகும். இதற்கு முன் டெல்லி வீரா் டேல் ஸ்டெயின் மணிக்கு 154.4 கி.மீ. வேகத்தில் பந்துவீசியதே அதிகமாக இருந்தது.

இதுகுறித்து ஆட்டத்துக்குப் பிறகு பேசிய நாா்ட்ஜே கூறுகையில், ‘ஆட்டத்தின்போது பந்துவீசுகையில் அது அத்தனை வேகமானது என்பதை உணரவில்லை. பின்னரே அதுகுறித்து தெரிந்துகொண்டேன். எனது பந்துவீச்சில் வேகத்தை கூட்டுவதற்காக முயற்சித்து வருகிறேன். அதற்கு இவ்வாறு பலன் கிடைப்பதில் மகிழ்ச்சி. ஆனால் இதுபோன்ற வேகம் தேவையான தருணங்களில் கிடைப்பது முக்கியமாகும்’ என்றாா்.

முன்னதாக நாா்ட்ஜேவின் அந்த அதிவேக பந்துவீச்சை பவுண்டரிக்கு விளாசினாா் ராஜஸ்தான் வீரா் ஜோஸ் பட்லா். அதற்கு பழி தீா்க்கும் விதமாக மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசி பட்லரை வீழ்த்தினாா் நாா்ட்ஜே.

இதனிடையே, ராஜஸ்தான் இன்னிங்ஸின்போது பந்தை ஃபீல்டிங் செய்ய முயன்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடது தோளில் அடி பட்டது. அந்த இடத்தில் அவருக்கு வலி இருப்பதாகவும், எனினும் தோள்பட்டையை அசைப்பதில் பிரச்னை இல்லை என்றும் அணி வீரா் ஷிகா் தவன் கூறினாா். இருந்தாலும், ஸ்கேன் அறிக்கை வந்த பிறகே அந்த அடியின் முழுமையான தாக்கம் குறித்து தெரியவரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com