நான்கு மெயிடன் ஓவர்கள்: கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி நிகழ்த்திய சாதனைகள்!

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி நிகழ்த்திய சாதனைகள்
நான்கு மெயிடன் ஓவர்கள்: கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி நிகழ்த்திய சாதனைகள்!

ஐபிஎல் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. 

அபுதாபியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களே எடுத்தது. 85 என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் 13.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து வென்றது. 3 விக்கெட்டுகள் எடுத்த ஆர்சிபியின் சிராஜ், 2 மெயிடன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார். ஐபிஎல் போட்டியில் அதற்கு முன்பு எந்தவொரு பந்துவீச்சாளரும் ஒரே ஆட்டத்தில் 2 மெயிடன் ஓவர்களை வீசியதில்லை.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஆர்சிபி அணி.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி நிகழ்த்திய சாதனைகள்:

2

ஐபிஎல் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 2 மெயிடன் ஓவர்கள் வீசிய முதல் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை முகமது சிராஜ் பெற்றுள்ளார். முதல் இரு ஓவர்களில் ஒரு ரன்னும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை அவர் எடுத்தார்.

4

ஆர்சிபி அணி வீரர்கள் 4 மெயிடன் ஓவர்களை வீசினார்கள். இதுவும் ஓர் ஐபிஎல் சாதனை தான். சிராஜைத் தவிர கிறிஸ் மாரிஸும் வாஷிங்டன் சுந்தரும் தலா ஒரு மெயிடன் ஓவரை வீசினார்கள். இதற்கு முன்னால் ஒரு இன்னிங்ஸில் 2 மெயிடன் ஓவர்களுக்கு மேல் வீசப்பட்டது இல்லை.

72

விளையாடிய 120 பந்துகளில் 72 பந்துகளில் கேகேஆர் அணியால் ஒரு ரன்னும் எடுக்கமுடியாமல் போனது. இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு எதிராக 75 டாட் பந்துகளை விளையாடியது கேகேஆர் அணி. இந்த வருடம் இதற்கு முன்பு அதிக டாட் பந்துகளை விளையாடிய அணியும் கேகேஆர் தான். மும்பைக்கு எதிராக 57 டாட் பந்துகளை விளையாடியது.

84

ஓர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்காமல் 20 ஓவர்களில் எடுத்த மிகக்குறைந்த ரன்கள் இதுதான். நேற்றைய ஆட்டத்தில் கேகேஆர் அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. இதற்கு முன்பு 2011-ல் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. 

8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் குறைந்த எகானமி கொண்ட பந்துவீச்சு (குறைந்தது 2 ஓவர்கள்) என்கிற பெருமை சிராஜுக்குக் கிடைத்துள்ளது. இந்த ஆட்டத்துக்கு முன்பு சிராஜின் எகானமி - 9.29. ஐபிஎல் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசிய பந்துவீச்சாளர்களில் அதிக எகானமி கொண்ட பந்துவீச்சாளர் - சிராஜ் தான். 

2

கேகேஆர் அணியின் முதல் 3 பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்களின் எண்ணிக்கை. ஐபிஎல் போட்டியில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் எடுத்த குறைவான ரன்களின் சாதனையை இது சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு, 2009-ல் சிஎஸ்கேவுக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் இதே எண்ணிக்கையிலான ரன்களே எடுத்தார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com