சிராஜுக்கு புதிய பந்தைத் தந்தது ஏன்?: ஐபிஎல் சாதனை குறித்து விராட் கோலி

புதிய பந்தை வாஷிங்டன் சுந்தருக்குத் தர யோசித்தேன். டாஸில் தோற்றது நல்லதாகப் போய்விட்டது.
சிராஜுக்கு புதிய பந்தைத் தந்தது ஏன்?: ஐபிஎல் சாதனை குறித்து விராட் கோலி


ஐபிஎல் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. 

அபுதாபியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களே எடுத்தது. 85 என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் 13.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து வென்றது. 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஆர்சிபி அணி. 

கொல்கத்தா பேட்டிங் செய்தபோது 2-வது ஓவரை வீசிய சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்து மெயிடன் ஓவருடன் தொடங்கினார். அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கெட் எடுத்து அதிலும் மெயிடன் ஓவரை வீசினார். இதனால் முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்தது கேகேஆர் அணி. 

3 விக்கெட்டுகள் எடுத்த ஆர்சிபியின் சிராஜ், 2 மெயிடன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார். ஐபிஎல் போட்டியில் அதற்கு முன்பு எந்தவொரு பந்துவீச்சாளரும் ஒரே ஆட்டத்தில் 2 மெயிடன் ஓவர்களை வீசியதில்லை.

இந்நிலையில் புதிய பந்தில் ஓவர்கள் வீசி விக்கெட்டுகளும் மெயிடன் ஓவர்களும் வீசிய சிராஜின் சாதனை பற்றி ஆர்சிபி அணி கேப்டன் கோலி கூறியதாவது:

புதிய பந்தை வாஷிங்டன் சுந்தருக்குத் தர யோசித்தேன். டாஸில் தோற்றது நல்லதாகப் போய்விட்டது. நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய நினைத்தோம். முதலில் வாஷிங்டன் சுந்தரையும் கிறிஸ் மாரிஸையும் பந்துவீச அழைக்கலாம் என இருந்தேன். பிறகு மாரிஸையும் சிராஜையும் பந்துவீசச் செய்தேன். எங்கள் அணியில் எப்போது சரியான திட்டங்கள் இருக்கும். திட்டம் 1, திட்டம் 2, திட்டம் 3 என வைத்திருப்போம். திட்டங்களை நடைமுறைப்படுத்தவே நாங்கள் உள்ளோம். ஐபிஎல் ஏலத்திலும் சரியாகத் திட்டமிட்டோம். அதற்கான பலன் கிடைத்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com