நடு ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ராணா, நரைன்: கொல்கத்தா அணி 194 ரன்கள் குவிப்பு

தில்லி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது.
இயன் மார்கன்
இயன் மார்கன்

தில்லி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தில்லி கேபிடல்ஸ் அணி 2-ம் இடத்திலும் கொல்கத்தா அணி 4-ம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதி வருகின்றன. 

டாஸ் வென்ற தில்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். நோர்கியோ, ரஹானா ஆகியோர் சாம்ஸ், பிரித்வி ஷாவுக்குப் பதிலாக தில்லி அணியில் இடம்பெற்றுள்ளார்கள். கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மீண்டும் இடம்பிடித்துள்ளார். குல்தீப் யாதவுக்குப் பதிலாக நாகர்கோட்டி விளையாடுகிறார். 

இளம் வீரர் ஷுப்மன் கில் 9 ரன்களில் நோர்கியோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த 5 ஆட்டங்களாக ஷுப்மன் கில்லால் ஒரு அரை சதமும் எடுக்க முடியவில்லை. கடைசியாக அக்டோபர் 10 அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக அரை சதமெடுத்தார். திரிபாதியும் நோர்கியோ பந்துவீச்சில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்றைக்கும் மார்கனுக்கு முன்பு 4-ம் நிலை வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஆனால் 3 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. 9 மற்றும் 10-வது ஓவர்களில் கொல்கத்தா அணி 31 ரன்கள் எடுத்தது.

நடு ஓவர்களில் சுனில் நரைனும் நிதிஷ் ராணாவும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்கள். 

7 முதல் 16 ஓவர்களில் கொல்கத்தா அணி 115 ரன்கள் எடுத்தது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்ததில் இதற்கு 2-ம் இடம். ஷார்ஜாவில் பஞ்சாப் அணி கொல்கத்தாவுக்கு எதிராக 118 ரன்களை நடு ஓவர்கள் எடுத்தது. 

சிக்ஸரும் பவுண்டரிகளும் அடித்ததால் கொல்கத்தாவின் ஸ்கோர் கடகடவென்று உயர்ந்தது. ராணா 35 பந்துகளிலும் சுனில் நரைன் 24 பந்துகளிலும் அரை சதங்கள் எடுத்தார்கள். 

32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ரபாடா பந்துவீச்சில் நரைன் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ராணா 81, மார்கன் 17 ரன்களுடன் ஆட்டமிழந்தார்கள்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. 

கடந்த 15 ஐபிஎல் ஆட்டங்களில் இதுவே ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். தில்லி அணி இந்த இலக்கை எட்டுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com