சிஎஸ்கே அணியை 100 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும்: பொலார்ட் ஆதங்கம்

சிஎஸ்கே அணியை 100 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் சாம் கரண் அபாரமாக விளையாடினார்.
சிஎஸ்கே அணியை 100 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும்: பொலார்ட் ஆதங்கம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தோ்வு செய்தது. சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சோ்த்தது. சாம் கரன், 47 பந்துகளில் 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தாா். மும்பை தரப்பில் டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 18 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் ஆடிய மும்பை அணியில் டி காக் - இஷன் கிஷான் இணை அபாரமாக ஆடியது. மும்பை அணி 12.2 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இஷன் கிஷான் 37 பந்துகளில் 5 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 68, டி காக் 37 பந்துகளில் 2 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இதன்மூலம் 7-ஆவது வெற்றியைப் பெற்ற மும்பை அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில் 8-ஆவது தோல்வியைச் சந்தித்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களையும் பெரிய வித்தியாசத்தில் வென்று இதர நான்கு அணிகளும் 12 புள்ளிகளுக்கு மேல் எடுக்காமல் இருந்தால் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கலாம். எனினும் இந்தச் சூழல் உருவாவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது.

ஆட்டம் முடிந்த பிறகு மும்பை அணி கேப்டன் பொலார்ட் பேசியதாவது:

சிஎஸ்கே அணியை 100 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் சாம் கரண் அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரண்டு மூன்று விக்கெட்டுகள் கிடைத்தாலே ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால் எங்களுக்கு நான்கைந்து விக்கெட்டுகள் கிடைத்தது அபாரமாக இருந்தது. தொடக்க வீரர்களே ஆட்டத்தை முடித்ததும் அருமை. இரு புள்ளிகளை இந்த ஆட்டத்தில் பெற்று அதன்பிறகு புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பற்றி பேச நினைத்தோம். சூப்பர் ஓவரில் தோற்றது வருத்தத்தை ஏற்படுத்தினாலும் நாங்கள் மீண்டு வந்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com